Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' – ட்ருங் மை லான் வழக்கில் நீதிமன்றம்

வியட்நாமைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் வான் தின் பாட். இந்த நிறுவனத்தின் தலைவராக ட்ருங் மை லான் பதவி வகித்து வந்தார். இவர் 2012-ம் ஆண்டுக்கும் 2022-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வங்கிச் சட்டங்களை மீறி, சைகோன் வர்த்தக வங்கியில் இருந்த பணத்தை சட்டவிரோதமாக கொள்ளை அடித்துள்ளார். இதற்காக அவர் அரசு அதிகாரிகளுக்கு நிறைய லஞ்சம் கொடுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் 2022-ம் ஆண்டில் வெடித்து பூதாகரமான சர்ச்சையாக எழுந்தது. அவர் சுமார் 12 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ட்ருங் மை லான் 2022-ம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியது. ஏராளமான அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல முன்னணி அரசியல் தலைவர்களும் இதில் சிக்கினர். வியட்நாம் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய மோசடி என்பதால், பொதுமக்களின் பார்வையும் இந்த வழக்கின் மீது இருந்தது. இது மட்டுமல்லாமல், இந்த மோசடியால் வியட்நாம் நாட்டின் ரியல் எஸ்டேட் துறையும் மிகுந்த சிக்கலுக்கு உள்ளானது.

ட்ருங் மை லான்

வீடு வாங்குவோருக்கு தள்ளுபடி, தங்கம் என பல சலுகைகளை வழங்கினாலும் வீடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. வாடகைக் கட்டணங்களும் குறைந்துவிட்டன. நாட்டின் பொருளாதாரத்திற்கே அபாயம் ஏற்படும் வகையில் அமைந்தது. வியட்நாமின் மொத்த ஜிடிபி-யில் 3 சதவீதத்தை இந்த மோசடி சமம் செய்யும் என்பது புள்ளிவிவரங்கள் கூறுகின்றது. வியட்நாம் நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் விவகாரம் குறித்து மார்ச் 5-ம் தேதி ஹோ சி மின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. எதிர்பார்த்ததைவிட வழக்கு விசாரணை விரைவாக முடிந்துவிட்டது. மோசடி, சட்ட விதிமீறல் ஆகிய விவகாரங்களில் ட்ருங் மை லான் குற்றம் புரிந்திருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. மேலும், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ட்ருங் மை லான் மேல்முறையீடு செய்திருந்தார்.

03/11/2024 அன்று ,இந்த வழக்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மிங் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ட்ருங் மை லான் க்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தனர். ஆனால் வியட்நாம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டபடி ட்ருங் மை லான் மொத்த மோசடியில் 75% தொகையை திரும்ப செலுத்தினால் மரண தண்டனை, வாழ்நாள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் என்று தீர்ப்பை அளித்தனர்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ட்ருங் மை லான்

அவர் மோசடி செய்த 12 பில்லியன் அமெரிக்க டாலரில், 75% தொகையான 9 பில்லியன் அமெரிக்க டாலரைச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. ட்ருங் மை லானின் வழக்கறிஞர்கள், அவர் முன்பே குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைக்கு அவர் அளித்த முழு ஒத்துழைப்பு காரணமாகவும்‌ இந்த மோசடிக்காக அவர் வருத்தம் தெரிவித்த காரணங்களையும் கருத்தில் கொண்டு தண்டனைகளை குறைக்குமாறு வாதாடினர்.

ஆனால் அவர் செய்த மோசடி வியட்நாமின் வங்கி அமைப்பு ,மக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்… அதற்கு இந்த காரணங்கள் போதாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர். இந்த வழக்கு வியட்நாமின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. நிதித் துறையில் உள்ள நிர்வாக குறைபாடுகளை இந்த வழக்கு அப்பட்டமாக காட்டியள்ளது என்று மக்கள் கூறுகின்றனர். கடுமையான நிதிக் குற்றங்களில் மரண தண்டனை விதிக்கப்படும் வியட்நாமின் ஊழல் எதிர்ப்புச் சட்டங்களின் நினைவூட்டலாகவும் இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது. வியட்நாம் சட்டங்களின்படி மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாது. மேல்முறையீட்டுக்கு அனுமதிப்பர். மேலும் குற்றவாளி, ‌ ஜனாதிபதியை அணுகி மரண தண்டனையை ரத்து செய்யும் வகையில் தண்டனையை குறைக்கும் கருணை மனுவை கொடுக்க வாய்ப்பளிக்கப்படுகிறது . அதனால் ட்ருங் மை லான் இந்த வழியையும் நிச்சயம் முயற்சிப்பார் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர் .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.