`சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தர்ஷினி என்ற சிறுமி பங்கேற்று பாடி வருகிறார். இவர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள அம்மணம்பாக்கம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
அம்மணம்பாக்கம் கிராமத்திலிருந்து பள்ளிப் படிப்பிற்காக குழந்தைகள் அனைவரும் அனந்தமங்கலம் என்ற கிராமத்திற்குச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அனந்தமங்கலம் கிராமம் அம்மணம்பாக்கத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அம்மணம்பாக்கம் பகுதியிலிருந்து அனந்தமங்கலம் பகுதிக்கு பஸ் வசதி இல்லை என்றும் தினமும் குழந்தைகள் அவ்வளவு தொலைவு நடந்து செல்கிறார்கள் என கடந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் பேசியிருந்தார் தர்ஷினி.
இதனை தொடர்ந்து தர்ஷினியின் தந்தையிடம் பேசி அம்மணம்பாக்கம் குறித்த கூடுதல் தகவல்களுடன் செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.
தர்ஷினியின் தந்தை ராஜ்குமார், “ என் புள்ள ஸ்கூலுக்கு படிக்கப்போனதுனாலதான் இன்னைக்கு ஜீ தமிழ் நிகழ்ச்சியில பாடிட்டு இருக்கா… அந்த மாதிரி மற்ற குழந்தைகளுக்கும் வாய்ப்பு அமையணும். குழந்தைகள் எல்லோரும் தினமும் பள்ளிக்கூடத்துக்காக10 கி.மீ நடக்குறாங்க. அதுனாலேயே தினமும் அயர்ச்சி அடைஞ்சிடுறாங்க!’ என நம்மிடையே வேதனை தெரிவித்திருந்தார்.
தர்ஷினி மற்றும் அவரின் தந்தையின் கோரிக்கை தற்போது நிறைவேறியிருக்கிறது. இந்தத் தகவல் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்குச் சென்றிருக்கிறது. இதை அறிந்ததும் அம்மணம்பாக்கம் பகுதியிலிருந்து அனந்தமங்கலம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்துக் கொடுத்திருக்கிறார். இவ்வழியில் இயக்கப்படவுள்ள பேருந்தை தர்ஷினி கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தர்ஷினியின் தந்தை ராஜ்குமாரை தொடர்புக் கொண்டோம். அழைப்பை எடுத்ததும், “சார்…பஸ் விட்டாங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அமைச்சர் சிவசங்கர் இந்த தகவலை தெரிஞ்சுகிட்டு என்கிட்ட பேசினார். அதன் பிறகு சேனல்ல பேசி இன்னைக்கு அம்மணம்பாக்கம் இருந்து அனந்தமங்கலம் பகுதிக்கு பஸ் விட்டாங்க. ஸ்கூலுக்குப் போகிற குழந்தைகளுக்கு பஸ் விட்டது பயனுள்ளதாக இருக்கும். தர்ஷினி பாப்பைவை எல்லோரும் பாராட்டுறாங்க!’ என நம்மிடையே மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…