இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல் இரவு ஆட்டமாக நாளை தொடங்குகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா, சிராஜ், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால், கோலி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரின் தொடக்கத்திலேயே தோல்வியடைந்து கடும் விமர்சனங்களுக்குள்ளான ஆஸ்திரேலிய அணி, பிங்க் பால் டெஸ்ட் மேட்சில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்க தீவிரமாக தயாராகி வருகிறது. மறுபக்கம், முதல் டெஸ்டில் பங்கேற்காத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணிக்குத் திரும்பியிருக்கிறார்.
அதோடு, ரோஹித் தனது ஓப்பனிங் ஸ்லாட்டை முதல் டெஸ்டில் ஓப்பனிங் ஆடிய கே.எல். ராகுலுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், முதல் டெஸ்ட் போட்டியின்போது களத்தில் ஜெய்ஸ்வால் தன்னிடம் ஜோவியலாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட சம்பவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்நாட்டு ரேடியோ சேனலில் அதைப் பகிர்ந்துகொண்ட நாதன் லயன், “இளம் வீரர் ஜெய்ஸ்வால், `நீங்கள் ஜாம்பவான். ஆனால் உங்களுக்கு வயதாகிவிட்டது.’ என்று நான் பந்துவீசும்போது கூறினார். அவர் 120 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது இதைக் கூறினார். ஆனால், இது நல்ல முறையிலான வேடிக்கையான நிகழ்வு.” எனக் கூறினார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால், மிட்செல் ஸ்டார்க்கிடம் `பந்து மெதுவாக வருகிறது’ என்று கூறியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…