கெபேஹா,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரிக்கல்டன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். கைல் வெர்ரைன் 48 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னண்டோ 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து இலங்கை தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.