`என் கல்யாண வாழ்க்கையில எந்த பாதிப்பும் இல்ல; வதந்திகளுக்கு என் பதில்…' – நடிகை ரம்பா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா கோலோச்சிய அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம் நடிகை ரம்பா.

நடிகை ரம்பா

“சினிமாவுல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, போஜ்புரி உள்ளிட்ட எட்டு மொழிகள்ல ஹீரோயினா பரபரப்பா இயங்கிட்டிருந்தபோது, என் மனசு அமைதியான ஒரு வாழ்க்கைக்காகத்தான் ஏங்கிச்சு. குடும்பம், குழந்தைகள்னு சீக்கிரம் செட்டில் ஆகணும்னு ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டதுபோலவே அன்பான கணவர், முத்து முத்தா மூணு பிள்ளைகள்னு இப்போ ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்கேன். கடவுளுக்கு நன்றி!” – நேர்காணல் ஒண்ணுல ரொம்ப ஹேப்பியா தன் குடும்ப வாழ்க்கையைப் பத்தி நடிகை ரம்பா பேசிய வார்த்தைகள் இவை.

1990-கள்ல தென்னிந்தியாவின் மன்ரோவா, தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியா இருந்தவங்கதான் ரம்பா. ‘சார்… ரம்பா சார்… பேசுது சார்’ அப்படின்னு தமிழ் ரசிகர்கள் இவங்களைப் பாத்து சொக்கிப் போனாங்கன்னுதான் சொல்லணும். குறிப்பா, கிளாமர் ரோல்கள்ல மட்டுமல்லாம, கேரக்டர் ரோல்கள்லயும் நடிச்சு இவங்க ஆச்சர்யப்படுத்தினாங்க. ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், பிரசாந்த், பிரபு, பிரபுதேவா, சத்யராஜ் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் பலருடனும் நடிச்சு, முன்னணி நடிகையா வலம் வந்த ரம்பாவோட பியூட்டிஃபுல்லான திரைப் பயணத்தைதான் இப்போ பார்க்கப் போறோம்.

நடிகை ரம்பா

ஆந்திர மாநிலம், விஜயவாடாவுல தெலுங்குப் பேசுற குடும்பத்துல ரம்பா பிறந்தாங்க. இவங்களோட ஒரிஜினல் பேரு விஜயலக்ஷ்மி. ஸ்கூல் ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில ரம்பா அம்மன் வேஷம் போட, அந்த பங்க்ஷனுக்கு சீஃப் கெஸ்ட்டா வந்த பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரனுக்கு, அம்மன் வேஷத்துல இருந்த ரம்பாவைப் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. தான் அடுத்து இயக்கவிருந்த படத்துல ரம்பாவை ஹீரோயினா நடிக்க வைக்க முடிவு செஞ்ச ஹரிஹரன், ரம்பாவோட பெற்றோர்கிட்ட இது பத்தி பேசியிருக்கார். அவங்களும் சம்மதம் சொல்ல, 1992-ல தன் 15 வயசுல மலையாளத் திரையுலகுல ‘அம்ருதா’ங்கிற பேருல ‘சர்கம்’ திரைப்படத்துல நாயகியா அறிமுகமானாங்க ரம்பா.

“என் முதல் படத்தோட ஹீரோ வினீத் சார். அந்தப் படத்துல நடிக்கப் போனப்போ எனக்கு கிளாப் அடிச்சது பிரபு சார். தேசிய விருது வாங்குன பெரிய இயக்குநரோட படத்துல நாம நடிக்கப்போறோம் அப்படின்னு அப்போ எனக்குத் தெரியாது. ஒரு குழந்தை மாதிரிதான் மலையாள சினிமா உலகத்துக்குள்ள நுழைஞ்சேன். அந்தப் படத்துல எனக்கு மேக்கப் சுத்தமா கிடையாது. பக்கவாதத்துல பாதிக்கப்பட்ட பொண்ணா அதுல நடிச்சிருப்பேன். முதல் படமே ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திச்சுன்னுதான் சொல்லணும்” – அப்படின்னு தன் முதல் படம் நினைவுகளைக் கொஞ்சலா பேட்டி ஒண்ணுல சொல்லிருக்காங்க ரம்பா.

நடிகை ரம்பா

ரம்பா நடிச்ச அந்த முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, ‘யாருடா இந்தப் பொண்ணு?’ அப்படின்னு தென்னிந்திய திரையுலகம் அவரைத் திரும்பிப் பாக்க ஆரம்பிச்சது. குறிப்பா, பிரபல தெலுங்குப் பட இயக்குநர் சத்யநாராயணா, ‘அ ஒக்கட்டி அடக்கு’ங்கிற தெலுங்குப் படத்துல ரம்பாவை ஹீரோயினா அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்துல இவங்க நடிச்ச கேரக்டரோட பேரு ரம்பா. காலப்போக்குல அந்தப் பெயரே இந்தப் பேரழகிக்கு நிரந்தர விசிட்டிங் கார்டா அமைஞ்சது.

ரம்பா தமிழ்ல நடிச்ச முதல் படம் ‘உழவன்’. 1993-ம் வருஷம் வெளிவந்த இந்தப் படத்துல நடிகர் பிரபுவோட முறைப்பெண்ணா, சின்ன ரோல்ல நடிச்சிருப்பாங்க. ஆனா, அந்தப் படத்துல வர்ற ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ பாட்டு, ரம்பாவை பட்டித்தொட்டியெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்துச்சு. அதன்பிறகு, சில வருட இடைவெளிக்குப் பிறகு, ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துல ஹீரோயினா நடிச்சாங்க. அந்தப் படத்தோட பாடல்கள், நகைச்சுவை காட்சிகளைப் பத்தி சொல்லவா வேணும்?

‘அழகிய லைலா… அவள் இவளது ஸ்டைலா..’னு சிவப்பு நிற ஃப்ராக் டிரஸ்ல செக்ஸி எக்ஸ்பிரஷன்ஸ், செம கிரேஸ்ஃபுல்னு சும்மா பின்னிப் பெடலெடுத்த ரம்பாவின் ஆட்டத்துக்கு, தமிழ்நாடே சொக்கிப்போனது சுவாரஸ்ய வரலாறு.

நடிகர் கார்த்திக்குடன் ரம்பா

“ ‘உள்ளத்தை அள்ளித்தா’ என் தலையெழுத்தையே மாத்துன படம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துல நடிக்க வைக்க முதல்ல ஒரு பெரிய ஹீரோயினைதான் அணுகியிருக்காங்க. ஆனா, அவங்க நடிக்க மறுத்ததால இயக்குநர் சுந்தர்.சி என்னை அப்ரோச் பண்ணார். தமிழ் சினிமாவுல எனக்குன்னு ஓர் இடத்தைப் பெற நினைச்சதால நானும் இந்தப் படத்துக்கு ஓகே சொன்னேன். இதுல ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துக்கு முன்னாடியே அர்ஜுனுடன் ‘செங்கோட்டை’, நடிகர் லிவிங்ஸ்டனுடன் ‘சுந்தர புருஷன்’ படங்கள்ல நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அந்தப் படங்களோட ஷூட்டிங் முடிய லேட் ஆனதால அதுக்கு முன்னாடியே ‘உள்ளத்தை அள்ளித்தா’ ரிலீஸாகி, படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால, ‘செங்கோட்டை’ படத்துல என் ரோலை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணாங்க. ‘விண்ணும் மண்ணும் சொல்லும் ரம்பா ரம்பா’ பாடலையும் அவசர அவசரமா அதுல சேர்த்துப் படத்தை ரிலீஸ் பண்ணாங்க” – இது, தன் ஆரம்பகால வளர்ச்சி பத்தி தன்னடக்கத்துடன் ரம்பா கொடுத்த ஸ்டேட்மென்ட்.

‘சுந்தர புருஷன்’ படத்துல கிராமத்துப் பொண்ணா நடிப்புல வெரைட்டி காட்டினாங்க ரம்பா. தொடர்ந்து, பிரபுவுடன் ‘சிவசக்தி’, விஜயகாந்துடன் ‘தர்ம சக்கரம்’ உள்ளிட்ட பல படங்கள்ல நடிச்சவங்களுக்கு, ‘அருணாசலம்’ படத்துல சூப்பர் ஸ்டார்கூட நடிக்கும் வாய்ப்பும் கிடைச்சது. இன்னொரு பக்கம், அப்போ வளர்ந்து வரும் ஹீரோவா கவனம் ஈர்த்த அஜித்துடன் ‘ராசி’ படத்துல நடிச்சு, தனக்கு சூப்பரா நடிக்கவும் வரும்னு நிரூபிச்சாங்க. கரியர்ல உச்சத்துல இருந்தப்போவே நிறைய டபுள் ஹீரோயின் கதைகள்ல நடிச்சு, ‘என் வழி தனி வழி’னு ராஜநடை போட்டாங்க ரம்பா. இதுக்கு உதாரணமா, ‘வி.ஐ.பி’, ‘ஜானகிராமன்’, ‘காதலா காதலா’ போன்ற பல படங்களைப் பட்டியலிடலாம். அதுலயும் ‘நினைத்தேன் வந்தாய்’ படத்துல, நடிகர் விஜய்யின் ட்ரீம் கேர்ளா வந்தவங்க, ‘தொடையழகியா’ புகழ்பெற்று, 90’ஸ் கிட்ஸின் மறக்க முடியாத நாயகியா மாறினாங்க. ஊர் உலகமே பேசிய அந்தப் படத்தைப் பத்தி ரம்பா என்ன சொல்றாங்கனு கேட்போமா?

நடிகர் விஜய் உடன் ரம்பா

“ ‘நினைத்தேன் வந்தாய்’ படத்துல நடிக்கிறப்போ நானும் நடிகை தேவயானியும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். எப்போ ஷூட்டிங் போனாலும் ஷாட் முடிஞ்சதும் என் அம்மாகூட போய் உட்கார்ற நான், அந்தப் பட ஷூட்டிங்ல மட்டும் ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதுக்குப் பிறகும் தேவயானி பின்னாடியே போய் பேசி சிரிச்சிட்டிருப்பேன். நிஜமாவே ஓர் அக்கா – தங்கை மாதிரி நாங்க பழகினோம்”னு பாசமழை பொழியுறாங்க இந்த பியூட்டி.

ரம்பா-கார்த்திக் காம்போ தொண்ணூறுகள்ல பெரிதும் பேசப்பட்ட ஹிட் கூட்டணி. கார்த்திக்கோட அப்பாவித்தனமான ரொமான்ஸும், ரம்பாவின் கொஞ்சலான நடிப்பும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துச்சு. அதனால, ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தோட வெற்றிக்கு அப்புறமா, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘அழகான நாட்கள்’, ‘சுயம்வரம்’ உள்ளிட்ட படங்கள்லயும் இந்த ஜோடி பேசும்படியா அமைஞ்சது.

ரம்பா தன் ஒரிஜினல் வாய்ஸ்ல பேசி, ‘நடிகை ரம்பா’வாவே கெஸ்ட் ரோல்ல நடிச்ச ‘உன்னருகே நானிருந்தால்’ படம் அவங்களுக்குப் பெரிய பேரை வாங்கிக் கொடுத்துச்சு. குறிப்பா, பார்த்திபன் மற்றும் விவேக் உடனான ரம்பாவோட காமெடி காட்சிகள் வேற லெவல்ல இருக்கும். “சார்… ரம்பா சார்…”, “ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஸ்வீட் சாப்பிடுகிறதே… அடடே ஆச்சர்யக்குறி!” அப்படின்னு நடிகர் பார்த்திபன் காதல் ரசனையுடன் கவிதை மழை பொழிய, “இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குறவரைக்கும் தமிழ்நாட்டுல உன்ன யாரும் அடிச்சுக்க முடியாது பேபி”னு நடிகர் விவேக்குடன் சேர்ந்து, தமிழ் ரசிகர்களும் சிலாகிச்சாங்க.

நடிகை ரம்பா

கரியர்ல உச்சத்துல இருந்தப்போ, ‘மின்சார கண்ணா’ படத்துல விஜய்யுடன் மறுபடியும் டூயட் ஆடிய ரம்பா, ‘பூமகள் ஊர்வலம்’ படத்துல பிரசாந்துடன் பிரமாதமா நடிச்சதுடன், ‘குங்குமப்பொட்டுக் கவுண்டர்’ படத்துல படிக்காத அம்மாவாகவும் ஸ்கோர் பண்ணாங்க. கோபக்கார அண்ணியா ‘ஆனந்தம்’ படத்துல இவங்க மிரட்டலா நடிச்சது ரசிகர்கள் எதிர்பார்க்காத வெர்சடைல் ஆக்டிங். நடிப்புல மட்டுமில்லைங்க, டான்ஸலயும் ரம்பா மாஸ்தான். பிரபுதேவா, விஜய், பிரசாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் போட்டிப்போட்டு டான்ஸ்ல பட்டையைக் கிளப்பினாங்க. அந்த வரிசையில, ‘சுக்ரன்’, ‘காதலர் தினம்’ போன்ற படங்கள்ல ஒரு பாட்டுல மட்டுமே டான்ஸ் ஆடியும் அதகளம் செஞ்சாங்க. தமிழ் தாண்டி, தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகள்லயும் ஹீரோயினா முத்திரை பதிச்சாங்க.

வாழ்க்கை எப்பவுமே ரோஜா படுக்கையா மட்டுமே இருக்காது இல்லையா? ‘3 ரோசஸ்’ படத்தைத் தயாரிச்ச ரம்பா, ஜோதிகா, லைலா ஆகியோருடன் சேர்ந்து இந்தப் படத்துல நடிச்சாங்க. இந்தப் படம் மோசமான தோல்வியைச் சந்திச்சதால, தயாரிப்பாளரா ரம்பாவுக்கு பலத்த அடி விழுந்துச்சு. கழுத்தை நெரிக்கும் கடன் சுமைக்கு ஆளான ரம்பா, சென்னையில இருந்த தன் வீட்டை விக்கிற நிலைமைக்கும் போனாங்க. ஆனாலும் இவங்க நம்பிக்கையை இழக்கல. அப்படியே துவண்டுபோய் நின்னுடல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்புரினு பல மொழிகள்ல தொடர்ந்து நடிச்சு சினிமால தன் இருப்பைத் தக்க வெச்சாங்க. அதேமாதிரி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள்ல ஒளிபரப்பான பல டிவி ரியாலிட்டி ஷோக்கள்ல நடுவராவும் சிறப்பா செயல்பட்டாங்க.

நடிகை ரம்பா

சுமார் 18 வருஷங்கள் சினிமா ீல்டுல புகழுடன் இருந்த ரம்பா, 2010-ம் வருஷம் கனடாவுல வசிக்கிற இலங்கைத் தமிழரான இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை காதல் திருமணம் செஞ்சுக்கிட்டு, அங்கேயே செட்டில் ஆனாங்க. இந்தத் தம்பதிக்கு ரெண்டு பெண் குழந்தைகளும் ஒரு பையனும் இருக்காங்க.

ரம்பாவோட திருமண வாழ்க்கைல விரிசல் விழுந்துட்டதாகவும், அவர் தன் கணவரிடமிருந்து விவாகரத்துக் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில மனு தாக்கல் செஞ்சிருப்பதாகவும் சில வருஷங்களுக்கு முன்னால பரபரப்பா நியூஸ் வலம் வந்துச்சு. ஆனா, இது வெறும் வதந்திதான்.

குடும்பத்தினருடன் ரம்பா

“நானும் என் கணவரும் எங்க குழந்தைகளோட ரொம்ப மகிழ்ச்சியா வாழுறோம்” அப்படின்னு விளக்கம் கொடுத்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வெச்சாங்க ரம்பா.

திருமணத்துக்கு அப்புறமா ரம்பா இப்ப வரைக்கும் எந்தப் படத்துலயும் நடிக்கல. ஆனா, குழந்தைகளுக்குச் சமைக்கிறது, அவங்களை ஸ்கூல்ல பிக்கப் – டிராப் பண்றது, கணவரோட பிசினஸை கூட இருந்து பார்த்துக்கிறதுன்னு ரம்பா பர்ஃபெக்ட் ஹோம்மேக்கரா ரொம்பவே பிஸியா இருக்காங்க. ரம்பா தீவிரமான சாய்பாபா பக்தரும்கூட. ஆன்மிகத்துலயும் ரொம்ப ஈடுபாட்டுடன் இருக்காங்க. சினிமால பல வருஷமா நடிக்காம இருந்தாலும், பிரபுதேவா, மீனா, குஷ்பு, கலா மாஸ்டர் உட்பட தன் சினிமா நண்பர்களோட இப்பவும் நல்ல டச்ல இருக்காங்க.

சோஷியல் மீடியால ஆக்டிவ்வா இருக்கிற ரம்பா, “என் சோஷியல் மீடியா ஹேண்டில்ஸ் எதுக்கும் நான் அட்மின் வச்சுக்கல. நானே தான் போட்டோஸ் மற்றும் பதிவுகள் எல்லாத்தையும் போஸ்ட் பண்றேன். அதேமாதிரி என் ரசிகர்களோட மெசேஜ், கமென்ட்ஸ் எல்லாத்தையுமே பொறுமையா வாசிச்சு பதில் கொடுக்கிறதும் என் வழக்கம்.

நடிகை ரம்பா

ஏன்னா, வீடு மட்டுமே உலகம்னு வாழ்ந்த விஜயலக்ஷ்மிங்கற என்னை ரம்பாவா அங்கீகரிச்சு, இந்த உலகத்தையே என் வீடா மாத்தினது ரசிகர்கள்தானே(?). அதனால, என்றென்றும் ரசிகர்களுடன் நேரத்தொடர்புல இருக்கவே ஆசைப்படுறேன்”னு நெகிழ்ச்சியும் அளவில்லா மகிழ்ச்சியுமா பேட்டி ஒண்ணுல அன்லிமிட்டட் அன்புடன் சொல்லியிருக்காங்க ரம்பா.

உண்மைதாங்… லைம்லைட்ல இல்லைன்னா என்ன? அப்பவும் இப்பவும் எப்பவும் 90’s கிட்ஸ்களின் இதயம் சொல்லிக்கிட்டே இருக்கும் ரம்பா ரம்பா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.