கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டோசினா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அவசர குழுவினர் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து விவரங்கள் இதுவரை இல்லை.