பெங்களூருவில் சாமியார் சிலை அவமதிப்பு.. குற்றவாளி சொன்ன பகீர் தகவல்

பெங்களூரு:

லிங்காயத் சமூக தலைவரும் சித்தகங்கா மடத்தின் சாமியாருமான சிவக்குமார் சுவாமிகள், 2019-ஆம் ஆண்டு தனது 111-வது வயதில் காலமானார். அவருக்கு பெங்களூருவின் வீரபத்ர நகரில் சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி நள்ளிரவில் இப்பகுதிக்கு வந்த மர்ம நபர், சிலையின் முகத்தில் கறுப்பு சாயம் பூசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மறுநாள் காலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிவக்குமார் சுவாமிகள் சிலையை அவமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிலையை அவமதித்த சாய்கிருஷ்ணா (வயது 37) என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தன் கனவில் இயேசு கிறிஸ்து தோன்றிய சிலையை சேதப்படுத்தியதாக கூறி உள்ளார். இதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் உண்மையை சொல்கிறாரா? அல்லது மனநிலை பாதிப்பின் தாக்கமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இதனால் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது மனநிலை குறித்தும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இருப்பினும், முழுமையான விசாரணை நடத்தாமல், உளவியல் காரணிகளால் மட்டுமே அவர் இந்த செயலை செய்தார் என்று கூறிவிட முடியாது. இந்த விஷயத்தில் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம், சாய் கிருஷ்ணாவின் வாக்குமூலம் இரு சமூகங்களுக்கிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் இருந்தது. அந்த நபருக்கு பெங்களூரு பேராயர் டாக்டர் பீட்டர் மச்சாடோ கண்டனம் செய்தார்.

“வகுப்புவாத மோதலை தூண்டும் முயற்சிகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். வகுப்புவாத பதற்றத்தை பரப்புவது மட்டுமே இத்தகைய வாக்குமூலத்தின் நோக்கம். அமைதி, கருணை மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களின் அடையாளமாக விளங்கிய சிவகுமார் சுவாமிகள் போன்ற மகான் மீது இந்த அவமரியாதை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பேராயர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.