மாநிலங்களவையில் காங். எம்.பி சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பணம் கண்டெடுப்பு: பாஜக அமளி

புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222ல் 500 ரூபாய் நோட்டுக்கள் 100 எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்ததை அடுத்து, பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து பாதுகாப்பு ஊழியர்களால் ரூபாய் நோட்டு கட்டு ஒன்று நேற்று (டிச. 5) கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. 500 ரூபாய் மதிப்புள்ள 100 நோட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவைக்கு தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை. எனவே தெரிவித்துள்ளேன்.

இந்த பணத்துக்கு யாராவது உரிமை கோருவார்கள் என காத்திருந்தேன். இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இவ்வளவு பெரிய தொகையை (ரூ. 50,000) மறப்பது நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிக்கிறதா? இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

ஜக்தீப் தன்கரின் இந்த அறிவிப்பை அடுத்து அபிஷேக் மனு சிங்வியை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்தால்தான் அது யாருடைய பணம் என்பது தெரிய வரும். விசாரணையை முடிக்காமல் அவைத் தலைவர் உறுப்பினரின் பெயரைக் கூறி இருக்கக்கூடாது” என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த தன்கர், “இது எனது கடமை. சபைக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். வழக்கமான நாசவேலை எதிர்ப்பு சோதனையின்போது இந்த பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பெயரை சொல்வதற்கு கார்கே ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்? இருக்கை எண் மற்றும் அதில் இருக்கும் உறுப்பினர் யார் என்பதை அவைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார், அதில் என்ன பிரச்சனை. அவைக்கு நோட்டு மூட்டைகளை எடுத்து வருவது ஏற்புடையதல்ல. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்விஷயத்தில் அவைத் தலைவர் தன்கரின் கருத்தை ஏற்கிறேன்.” என்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் மனு சிங்வி, “இதைக் கேட்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நேற்று மதியம் 12.57க்கு அவைக்கு வந்தேன். மதியம் 1 மணிக்கு அவை மூடப்படும். 1 மணி முதல் 1.30 வரை நான் கேண்டீனில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டேன். 1.30 மணிக்கு, நான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினேன். நான் நேற்று கேண்டீனில் மூன்று நிமிடங்கள் 30 நிமிடங்கள் தங்கியிருந்தேன். இது போன்ற ஒரு பிரச்சினையில் என் பெயரை இழுத்திருப்பது வினோதமாக இருக்கிறது.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.