வங்கதேச கரன்சியில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்

டாக்கா: வங்கதேச கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன.

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதன்காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது வங்கதேசத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.

வங்கதேச கரன்சி நோட்டுகளில் (டாக்கா) அந்த நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் அச்சிடப்பட்டு உள்ளது. புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் ரஹ்மானின் படத்தை நீக்கிவிட்டு மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய ரூபாய் நோட்டூகளை புழக்கத்தில்விட வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான டாக்டா டிரிபியூன் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: புதிய கரன்சி நோட்டுகளை அச்சிட வங்கதேச அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி வங்கதேச மத்திய வங்கி சார்பில் புதிய கரன்சிகள் அச்சிடப்பட்டு வருகின்றன. புதிய நோட்டுகளில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இடம் பெறாது. அவரது படத்துக்கு பதிலாக மதவழிபாட்டுத் தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் இடம்பெறும்.

அடுத்த 6 மாதங்களில் புதிய கரன்சிகள் புழக்கத்தில் விடப்படும். அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் புதிய கரன்சிகள் அறிமுகம் ஆகும். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பழைய கரன்சிகள் செல்லும். இவ்வாறு டாக்கா டிரிபியூன் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கதேச தூதரக அதிகாரிகள்: இந்தியாவின் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா மற்றும் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் வங்கதேச தூதரகங்கள் செயல்படுகின்றன. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து இரு தூதரகங்கள் முன்பும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து கொல்கத்தா, அகர்தலாவில் பணியாற்றிய வங்கதேச தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப அந்த நாட்டு அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி கடந்த 3-ம் தேதி அவர்கள் வங்கதேசத்துக்கு திரும்பி சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.