“2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும்…” – விஜய் மேடையில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சு

சென்னை: “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் நினைவு நாளான இன்று (டிச.6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஒரே நிறுவனத்தால் எப்படி மொத்த திரையுலகையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழலையும், மதவாதத்தையும் விஜய் எடுத்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வேங்கை வயல் பிரச்சினை இன்றைக்கு வரை தீர்க்க முடியாததற்கு காரணம் என்ன? ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். சாதிதான் இதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டால் தப்பு என்கிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். அதில் பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். தமிழகத்தில் மன்னராட்சிக்கு இடமில்லை. 2026-ல் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும். விஜய் வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று அந்த மக்களுடன் உரையாட வேண்டும். மக்கள் தமிழகத்தில் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டனர்” என்றார். இதையடுத்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். முதல் புத்தகத்தை ஆனந்த் டெல்டும்டெ பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, ‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நடிகர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். அதன் விவரம்: விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது ஏன்? – திருமாவளவன் விளக்கம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.