இந்தியாவின் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்.’ விகடன் பிரசுரமும், Voice of Commons நிறுவனமும் இணைந்து வெளியிடும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவை, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தித் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றியிருக்கிறார். முதல் பிரதியை அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெம்டும்டேவும், இரண்டாவது பிரதியை மேனாள் நீதிபதி சந்துருவும், மூன்றாவது பிரதியை ஆதவ் அர்ஜுனாவும், நான்காவது பிரதியை விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசனும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் விழா மேடையில் சிறப்புரையாற்றிய விஜய், “எல்லோருக்கும் வணக்கம். அம்பேத்கர் நினைவுநாளில், இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரமாக நான் நினைக்கிறேன். ஆனந்த் டெம்டும்டே, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.சந்துரு, ஆதவ் அர்ஜுனா மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள், தோழிகள், நண்பா, நண்பி, இந்த அரங்கில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம். இங்க இருக்குற எல்லார்கூடவும் இந்த மேடையைப் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.
இப்படியொரு பெரும் ஏற்பாடுகள் செய்து, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த விகடன் குழுமத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அம்பேத்கர் பற்றிப் பேசும்போது சட்டம் – ஒழுங்குப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. நாட்டில் எவ்வளவு சட்டம்-ஒழுங்கு மீறப்படுகிறது என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னைக்கும் மணிப்பூர்ல என்ன நடக்குதுனு எல்லாருக்கும் தெரியும். இதையெல்லாம் கொஞ்சம்கூடக் கண்டுக்கவே கண்டுக்காத அரசு நம்மளை மேல ஆட்சி செய்யுது.
சரி அங்கதான் அந்த அரசு (மத்திய அரசு) அப்படி இருக்குனா, இங்க இருக்கிற அரசு எப்படி இருக்கு…இங்க தமிழ்நாட்டுல வேங்கைவயல் கிராமத்துல என்ன நடந்துச்சுனு நம்ம எல்லாருக்குமே தெரியும். அந்த விஷியத்துல எந்தவித நடவடிக்கையும் எடுத்த மாதிரியே எனக்குத் தெரியல. இவ்வளவு காலமாகியும் இவையெல்லாம் மாறவில்லை. இந்தக் கொடுமை எல்லாத்தையும் அம்பேத்கர் பார்த்தார்ன, அவர் வெட்கப்பட்டுத் தலைகுனிந்து போவார்..” என்றார்.
வி.சி.க தலைவர் திருமா குறித்துப் பேசியவர், “வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்னைக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. அதை என்னால் நன்றாக யூகிக்க முடிகிறது. நான் இப்போது சொல்றேன்… அவர் மனசு முழுக்க முழுக்க இன்னைக்கு நம்ம கூடத்தான் இருக்கும்” என்றார்.