இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தேசிய தலைவர் அம்பேத்கரின் அனைத்து பரிமாணங்களையும் பேசும் `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலை, அவரின் நினைவு நாளில் விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது. இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய், மேனாள் நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, விசிக துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில், விஜய் நூலை வெளியிட சந்துரு அதைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் புத்தக உருவாக்கவுரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, “2026 தேர்தலுக்கான பணிகள் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாகக் கூடாது. தமிழகத்தை கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்.
குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளைக் கூறி 2014-ல் பாஜக வென்றார்கள். இன்றைக்கு வரைக்கும் பாஜக-வை யாராலும் வெல்ல முடியவில்லை. தமிழகத்தில் ஊழலை நாம் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். மன்னராட்சியைக் கேள்விகேட்டால் சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள்.” என்று கூறினார்.