BB TAMIL 8: DAY 60: விஷால் மீதுள்ள ஈர்ப்பை வெளிப்படையாகக் காட்டிய தர்ஷிகா; ஜாக்குலினின் ஓவர் டிராமா

‘ஒருவர் கெஞ்சியதற்காக யாராவது கோபப்படுவார்களா? இந்த உலகத்திலேயே அப்படியொரு அதிசயம் நடந்திருக்காது. அந்தச் சாதனையை செய்தவர் ஜாக்குலின். 

டெவிலாக இருக்கும் போதும் சரி, தேவதையாக மாறிய போதும் சரி, இந்த விளையாட்டைக் கெடுத்து அழுது புலம்பி குட்டிச் சுவராக்கியதில் ஜாக்குலினுக்கு முதலிடம். அப்படியொரு மோசமான டிராமா. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 60

‘டெவிலாக இருக்கத் தகுதியில்லாதவர்’ என்று ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சந்தேகமேயில்லாமல் ஜாக்தான் இதற்குத் தகுதியானவர். எனவே பெரும்பான்மையான வாக்குகள் அவருக்கு வந்ததில் ஆச்சரியில்லை. ஆனால் மஞ்சரியின் மீது காண்டில் இருக்கும் அருண், மஞ்சரியின் பெயரைச் சொன்னார். 

கதாபாத்திரத்தின் படி டெவிலாக மஞ்சரி நன்றாகவே செயல்பட்டார்.  மிளகாய், முட்டை போன்ற சித்திரவதைகளின் சதவீதம் கூடுதலாக இருந்தால் அது விமர்சிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்தத் தேர்வு ‘யார் டெவிலாக இல்லை?’ என்பது குறித்துத்தான். மஞ்சரி இதில் பொருந்த மாட்டார். ஆனால். “ஆட்டத்தை மஞ்சரி கேவலமாக ஆடினாங்க” என்று எகிறிக் குதித்தார் அருண்.

BBTAMIL 8: DAY 60

 தன்னுடைய வாய்ப்பு வரும் போது மஞ்சரி மூன்று நபர்களின் பெயர்களைச் சொல்ல ஆரம்பிப்பதற்குள் உள்ளே புகுந்து கட்டையைப் போட்ட அருண், அதற்கும் ‘டமுக்கு டப்பா’ டான்ஸ் ஆடி கத்த ஆரம்பித்து விட்டார். ஆரம்ப வாரங்களில் நிதானமாகவும் இனிமையாகவும் இருந்த அருண், நாட்கள் செல்லச் செல்ல கடுமையானவராக மாறிக் கொண்டிருக்கிறார். இதுதான் அவரது அசலான நிறமா? தனக்கு வேண்டியவர்கள் என்றால் ஒரு மாதிரியாகவும் வேண்டாதவர் என்றால் ஒரு மாதிரியாகவும் செயல்படுவதில் இன்னொரு ‘சவுந்தர்யா’வாக அருண் மாறி விட்டார். இத்தனைக்கும் மஞ்சரியும் அருணும் அமர்ந்து சமாதானப் பேச்சில் ஈடுபட்ட பிறகும் வன்மத்தைக் கொட்டுகிறார் அருண். 

இந்த ஆட்டத்தை மிக கவனமாக ஆடுபவர்களில் ஒருவர் தீபக். “உங்க வாக்குவாதத்துல டாஸ்க் பற்றிய ரகசியங்களை வெளில சொல்லிடாதீங்க” என்று பொதுவாக எச்சரித்தார். இறுதியில் ஜாக்குலின் சிறைத்தண்டனைக்கு தேர்வு செய்யப்பட்டது முற்றிலும் நியாயமான முடிவு. 

‘டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நாளை தொடரும்’ என்று பிக் பாஸ் அறிவிக்க “யப்பா.. சாமிகளா.. நைட்ல உக்காந்து கதை பேசறேன்னு டெவில் ரகசியங்களை சொல்லிட்டு இருக்காதீங்க.. டாஸ்க் முடிஞ்சப்புறம் என்ன வேணா பண்ணிக்கோங்க” என்று அனைவரையும் உஷார்படுத்தினார் தீபக். 

BBTAMIL 8: DAY 60

தோப்புக்கரண தண்டனைக்காக ஜெப்ரியிடம் தர்ஷிகா ‘ஸாரி’ கேட்க, “அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா.. ஃப்ரீயா விடு” என்று பெருந்தன்மையாக சொன்னார் ஜெப்ரி. என்றாலும் விசாரணை நாளில் இது நிச்சயம் பேசப்படும். 

“இந்த டாஸ்க்ல ஒவ்வொருத்தர் கிட்ட உள்ளே ஒளிஞ்சிட்டு இருந்தது வெளியே வந்தது.. கவனிச்சீங்களா?” என்று அருணிடம் ரஞ்சித் வியந்து பேச “மஞ்சரி ஒரு வைரஸ்” என்று எரிச்சலுடன் சொன்னார் அருண். “மிளகா.. முட்டைன்னு மத்தவங்க பண்ணதையும் என் கணக்கிலேயே எழுதி அருண் பதிவு பண்றாரு.. இது நல்லாவா இருக்கு?” என்று ராணவ்விடம் புலம்பிக் கொண்டிருந்தார் மஞ்சரி. 

பாலைவனத்திலும் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது என்பது மாதிரி ரணகளத்திற்கு நடுவிலும் விஷால் – தர்ஷிகாவின் டிராக் ஓடிக் கொண்டிருந்தது. அதை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. காலங்காலமாகத் தொடரும் ஆண் – பெண் உறவின் அலகிலா விளையாட்டு. விஷால் மீதுள்ள ஈர்ப்பை தர்ஷிகா வெளிப்படையாகவே காட்டுகிறார். ஆனால் விஷாலோ கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருக்கிறார். ‘எல்லாத்தையும் வெளில போய் பார்த்துக்கலாம். இங்க கேம்ல வேணாம். யார் உணர்வுகளையும் காயப்படுத்தக் கூடாதுன்றதுல கவனமா இருக்கேன். எதுவா இருந்தாலும் என் கிட்ட நேரடியா பேசு” என்பதையே ரீப்பீட் மோடில் தாழ்ந்த குரலில் பேசுகிறார். 

BBTAMIL 8: DAY 60

விஷால் உண்மையிலேயே இந்த விஷயத்தில் கறாராக இருந்தால் “இதோ பாருங்க.. தர்ஷிகா.. இது வெளில தவறா போறதுக்கு வாய்ப்பிருக்கு… அதனால கேம் முடியற வரைக்கும் போட்டியாளர்கள் மாதிரியே இருப்போம். வெளில போயும் இந்த ஈர்ப்பு தொடர்ந்தா யோசிப்போம்” என்று சொல்லி விலகியே இருக்க வேண்டும். ஆனால் இதை வைத்து கேமில் மைலேஜ் தேற்றலாம் என்கிற கணக்கும் விஷாலிடம் ஓடிக் கொண்டிருக்கிறதோ? இல்லையென்றால் இந்த உறவை ஊதிப் பெருக்குவது போல் ஏன் அவ்வப்போது தர்ஷிகாவிடம் தனி உரையாடலில் ஈடுபட வேண்டும்?! “நீ தெளிவாத்தான் இருக்கே.. நான்தான் கன்ஃப்யூஸ் ஆகறேன்” என்று தத்தளிப்புடன் சிரித்தார் தர்ஷிகா. 

மாலை 06.25க்கு ஆரம்பித்த சிறைத்தண்டனை, இரவு 10.45-க்கு முடிந்தது. ஜாக்குலின் பெயரை பிக் பாஸ் அழைக்கும் போதெல்லாம் ‘அம்மா..’ என்று அவர் தன்னிச்சையாக அலறுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. ஜாக்குலின் என்றல்ல, பொதுவாக பெண்களுக்கே இந்தப் பழக்கம் தன்னிச்சையாக இருக்கிறது. 

நாள் 60. ‘விக்ரம் வேதா’ படத்திலிருந்து பொருத்தமான பாடலை அலற விட்டார் பிக் பாஸ். இரவு முழுக்க கடலை வறுத்தும் தீராமல் காலையிலும் விஷால் – தர்ஷிகா உரையாடல் தொடர்வதை, ஏதோ ‘கௌதம் மேனன்’ படம் மாதிரியாக எடிட்டிங் டீம் காட்டி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தது. ‘இதோ.. அஞ்சு நிமிஷத்துல வரேன்னு சொன்னே.. அரை மணி நேரமாவுது’ என்று தூரத்திலிருந்து கிண்டலடித்தார் சாச்சனா. 

சபையைக் கூட்டிய பிக் பாஸ் “யார் எத்தனை இதயத்தைப் பறிச்சீங்க.. யார் யார் கிட்ட இருந்து பறிச்சீங்க. கணக்கு சொல்லுங்க” என்று கேட்டார். விஷால், ரயானிடமிருந்து எவரும் பறிக்கவில்லை. இந்தத் தகவலை அவர்கள் சொன்ன போது குழு மனப்பான்மையானது ஆட்டத்தில்  பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருப்பதை பார்க்க முடிந்தது. 

BBTAMIL 8: DAY 60

‘இத்துடன் லெவல் ஒன்று முடிந்தது’ என்று பிக் பாஸ் அறிவிக்க, ‘அப்படின்னா..அடுத்த வெவல் இருக்கா?” என்று மக்கள் அலறினார்கள். டெவில்களும் தேவதைகளும் இடம் மாற வேண்டும் என்பதைக் கூடவா அறிய மாட்டார்கள்? அப்படியே அறிவிப்பு வந்தது. ‘மாட்னீங்களா..” என்பது மாதிரி தேவதைகள் உற்சாகக் கூச்சலிட்டாலும் பிறகு நடந்த டாஸ்க்கில் எதுவுமே நிகழவில்லை. 

தேவதையாக இருந்து டெவிலாக மாறியவர்கள், முந்தைய ஆட்டத்தின் எதிர்வினைகளைப் பார்த்து விட்டதால் இப்போது இறங்கி ஆட அச்சப்பட்டார்களா என்று தெரியவில்லை. எனவே கோபம், அழுகை போன்றவற்றை வரவழைத்து சமநிலையைக் குலைத்து ஹார்ட்டைப் பறிக்க வேண்டும் என்கிற விதியைப் பயன்படுத்தாமல், வழிப்பறிக் கொள்ளைக்காரன் போல “அசைஞ்சுட்டே.. ஹார்ட்டைக் கொடுத்துடு” என்று பலவந்தமாகப் பிடுங்கிச் சென்றார்கள்.  இந்த வரிசையில் அன்ஷிதா செய்ததெல்லாம் அராஜகமான ஆட்டம். மஞ்சரி, சாச்சனா மீதிருந்த வெறுப்பு காரணமாக ஹார்ட்டை பலவந்தமாகப் பிடுங்கி மற்றவர்களுக்கு தானம் தந்தார். 

இரண்டாம் கட்டத்தில் சொதப்பிய போட்டியாளர்கள்

மிளகாய், முட்டை போன்ற தண்டனைகளைத் தந்துதான் சமநிலையைக் குலைக்க வேண்டும் என்பதில்லை. கேலி, கிண்டல்களின் மூலமாகக் கூட சலனத்தை ஏற்படுத்தலாம். அப்படி சுவாரசியமாக எதுவுமே நிகழவில்லை. உண்மையில் இரண்டாம் கட்ட டெவில்கள், அதற்குரிய தன்மையே இல்லாமல் ‘கொடுத்துடு.. கொடுத்துடு’ என்று பிடுங்கிச் செல்பவர்களாகவே இருந்தார்கள். எனவே இந்த இரண்டாம் கட்டம் சுவாரசியமே இன்றி சப்பென்று இருந்தது. 

மஞ்சரியின் மீது தண்ணீர் ஊற்றிய சத்யா, பிறகு வெள்ளை ஆடை என்பதால் கண்ணியமாக விலகி, ஏப்ரனை போர்த்தி விட்ட செயல் பாராட்டுக்குரியது. ஜாக் மற்றும் சவுந்தர்யாவிடம் அன்ஷிதா பேசிய வசனம் உண்மையானது. அவர் டெவில் மோடில் சொன்னாரோ அல்லது திட்டமிட்டே சொன்னாரோ, “நிஜமா இருக்கும் போது டெவிலா இருப்பாங்களாம்.. டெவிலா நடிக்கச் சொன்னா.. ‘எனக்கு நடிக்க வராது ப்ரோ’ன்னு கதறுவாங்களாம்’.. என்று அன்ஷிதா கிண்டல் அடித்தது உண்மையானது. 

BBTAMIL 8: DAY 60

இந்த ஆட்டத்தை சிறப்பாக கையாள்பவர்களைத்தான் பிக் பாஸ் உள்ளே அழைத்து சில பொறுப்புகளை அளிக்கிறார். அந்த வகையில் ஆனந்தியை அழைத்தவர், “மூன்று நபர்களைத் தேர்வு செய்து டார்கெட் செய்யுங்கள். மற்றவர்களின் ஹார்ட்டைப் பிடுங்கினாலும் செல்லும்” என்று சொல்லி அனுப்ப, சாச்சனா, மஞ்சரி, தர்ஷிகா என்று சரியான வரிசையைத் தேர்ந்தெடுத்தார்கள். 

இந்த ராணவ் டெவிலாகவும் அல்லாமல், தேவதையாகவும் அல்லாமல் நியூட்ரல் லெவலில் நின்று அனைவரையும் ஜாலியாக டார்ச்சர் செய்தார். ‘தீமைதான் வெல்லும்’ பாடல் ஒலிக்கும் போதெல்லாம் அவர் ஜாலியாக நடனமாடியது சுவாரசியமான காட்சி. ‘த.. ச்சீ.. ஒரமா பே’ என்கிற மாதிரியே பெரும்பாலோனோர் அவரை டீல் செய்வது ரசிக்கத் தகுந்ததாக இல்லை. பொறுமையின் சிகரமான ரஞ்சித்தே,  ராணவ்வின் குறும்புகள் காரணமாக மெல்லிய கோபத்தைக் காட்டினார். 

ஜாக்குலின் போட்ட ஓவர் டிராமா!

யார் கண்ணையும் நோக்காமல் புது மணப்பெண் மாதிரியே தலையைக் குனிந்து சமாளித்தார் தர்ஷிகா. அவர் அமைதியாக இருக்கிறார் என்பதற்காகவே ஹார்ட்டைப் பிடுங்கிச் சென்றார் அன்ஷிதா. அடுத்ததாக மஞ்சரியிடமிருந்து ஹார்ட்களைப் பிடுங்கி அழுகிணியாட்டம் ஆடினார்கள். ஒரு கட்டத்தில் “கேவலமா ஆடாதீங்கடா” என்று மஞ்சரி எரிச்சலாக, “நேத்து நீங்க என்ன பண்ணீங்க மேடம்?” என்று ஒழுங்கு காட்டினார் சத்யா. ஜெப்ரியும் இதற்கு பின்பாட்டு பாடினார். 

கோவா கேங்க்ஸில் அமைதியாக ஒரு கலவரம் ஆரம்பித்தது. ஒன்றுமே இல்லாத ஒன்றை ஊதிப் பெருக்கி பூகம்பமாக்கினார் ஜாக்குலின்.  ரஞ்சித், ஜெப்ரி, ரயான், ஜாக் என்று நால்வரும் தனியாக இருந்த சமயத்தில் “ஜெப்ரிக்காக ஒரு ஹார்ட்டை தர மாட்டியா. அவன் பாவம்ல” என்கிற மாதிரி ஆரம்பித்தார் ரஞ்சித். தானும் இந்த விளையாட்டில் இறங்கி எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக அவர் செய்த முயற்சி அது. 

BBTAMIL 8: DAY 60

ஆனால் ஜாக்குலினோ, “அவன் ஜெப்ரியா இருந்து கேக்கட்டும். தந்துடறேன். கேம்ன்னா தர மாட்டேன்” என்று சொல்ல ரஞ்சித்தின் அனத்தல் தொடர்ந்தது. இதனால் எரிச்சலான ஜாக்குலின் அனைத்து ஹார்ட்களையும் பிடுங்கி தூக்கிப் போட்டு விட்டு எரிச்சலுடன் அகன்றார். பிறகு தேம்பி அழுதபடி “அவரை எவ்வளவு பெரிய உயரத்துல வெச்சிருந்தேன்.. அறுபது நாளா நடிச்சிருக்காரு.. இப்படியா பண்ணுவாங்க?” என்று ஜாக்குலின் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததையெல்லாம் பார்த்தால் ரஞ்சித் அபாண்டமாக ஏதோ செய்து விட்டார் என்பது போல் தோன்றியது. ஒன்றுமேயில்லை. ஜெப்ரிக்காக கெஞ்சியிருக்கிறார். அவ்வளவுதான். 

“என்னைக் கோபப்படுத்தியிருந்தா கூட கொடுத்திருப்பேன்.. ஆனா பயங்கரமா கெஞ்சறாரு.. ப்ரோ.. எரிச்சலா வருது..” என்று என்பதையே ரிப்பீட் மோடில் சொல்லி மற்றவர்களிடம் அனத்தினார் ஜாக்குலின். டெவிலாக இருந்து கொண்டு கெஞ்சுதல் என்பது முரணானதுதான். இந்த நோக்கில் ஜாக்குலின் பாயிண்ட் சரியானது. ஆனால் வன்முறையில் துளி கூட விருப்பமில்லாத ரஞ்சித், விளையாட்டுக்காக செய்ததை ஜாக்குலின் சீன் ஆக்கி ஓவர் ஆக்ட் செய்து அழுததெல்லாம் அபத்தமான டிராமா. 

இந்த விஷயத்தில் சவுந்தர்யாவின் நேர்மையைப் பாராட்ட வேண்டும். பாம்பின் கால் பாம்பறியும். ஜாக்குலின் போட்ட சீன் அவரையே காண்டாக்கியது. “மச்சான். அவர் டாஸ்க்ல இருந்தார்.. அவருக்குத் தெரிஞ்ச முறைல கேட்டாரு.. நீ ஏன் இப்படிப் பண்றே?” என்று ஜாக்கை கண்டனம் செய்தது சிறப்பான காட்சி. தன் தரப்பு நியாயத்தை சவுந்தர்யாவிடமும் விளக்கிச் சொன்னார் ரஞ்சித். ஜாக்குலின் போட்ட ஓவர் சீன் காரணமாக ஹார்ட்களை பிடுங்கி கீழே வீசினார் ரஞ்சித். இந்த டிராமா அப்படியே ஜெப்ரிக்கும் பரவ அவரும் ஜாக்குலினிடம் ‘அக்கா. அக்கா..’ என்று பம்ம ஆரம்பித்தார். ரஞ்சித் செய்ததில் என்ன தவறு என்று கேட்கத் துணிவில்லை. கோவா கேங்ஸில் ரஞ்சித் வந்து இணைவதில் ஜாக்குலினுக்கு உள்ளூற விருப்பமில்லை என்று தோன்றுகிறது. எனவே இந்த டிராமாவாக இருக்கலாம். 

BBTAMIL 8: DAY 60

டெவில் அணியினர் தங்களின் திறமையைப் பயன்படுத்தாமல் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் போல் பிடுங்குவதை “கேமை கேமா ஆடுங்க.. பிடுங்கறதைத் தவிர வேற எதுவுமே உங்களுக்குத் தெரியாதா?” என்று கத்தி சவுந்தர்யா கோபத்தைக் காண்பித்தது சிறப்பான காட்சி. சவுந்தர்யாவின் இந்தக் கோபத்தில் நியாயம் இருந்தது.  சவுந்தர்யாவின் தலையீட்டிற்குப் பிறகு ரஞ்சித்திடம் மன்னிப்பு கேட்டார் ஜாக்குலின்.  அவரிடம் இருந்த ஸ்போர்ட்டிவ்னஸ் கணிசமாக குறைந்து டிராமா அதிகமாவது ஜாக்குலினுக்கு பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். 

இரண்டாவது லெவலில் விஷாலிடம் அதிக ஹார்ட்கள் இருந்த விஷயம் தெரிந்தது. எனவே அவர் நாமினேஷன் ஃப்ரீ பாஸைப் பெறக்கூடும். நாமினேஷனில் இருக்கும் தர்ஷிகாவிற்கு அதை தானம் செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்தது. 

BBTAMIL 8: DAY 60

அனைவரையும் அழைத்து அழுதபடி மன்னிப்பு கேட்டார் அன்ஷிதா. “கபாலி வந்திருக்கேன். இண்டு இடுக்குல. சந்து பொந்துல யாரு ஒளிஞ்சிருந்தாலும் வந்துடுங்க.. கபாலி மன்னிப்பு கேட்க விரும்பறேன்” என்று சத்யராஜ் ஒரு படத்தில் காமெடி செய்வார். அதைப் போல வீட்டில் உள்ள அனைவரிடமும் அநாவசியமாக மன்னிப்பு கேட்டார் அன்ஷிதா. ஜாக்குலின் செய்ததற்கு நிகரான டிராமா இது. “செய்யறதை செஞ்சுட்டு டக்குன்னு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்?” என்று சிறைத்தண்டனை பெற்ற ரயான் வியந்தது நியாயமான விஷயம். 

முதல் சுற்றில் பரபரப்பாக நடந்த ‘டெவில் டாஸ்க்’, இரண்டாம் சுற்றில் முற்றிலுமாக சுவாரசியம் இழந்து போனதைப் பார்க்க முடிந்தது. கேம் ஸ்பாயிலராக இருந்த ஜாக்குலினுக்கு ‘சிறந்த டெவில்’ பட்டத்தை அளித்து மகிழ்லாம்!. 

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.