KL Rahul | நோ பாலில் அவுட்டான கேஎல் ராகுல் – அப்புறம் நடந்தது என்ன?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. பகலிரவு போட்டியாக இந்த டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதனையொட்டி பிங்க் பால் இப்போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் அந்த அணி இந்திய அணியை 36 ரன்களுக்கு சுருட்டி படுதோல்வி அடைய செய்தது. அதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக இப்போட்டியை இந்திய அணி பார்க்கிறது. டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஜெய்ஷ்வால் கோல்டன் டக்

அதன்படி பெர்த் டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் – கேஎல் ராகுல் கூட்டணி இப்போட்டியிலும் ஓப்பனிங் களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஜெய்ஷ்வால் கோல்டன் டக்அவுட்டாகி வெளியேறினார். மிட்செல் ஸ்டார் வீசிய பந்தை லெக்சைடில் அடிக்க அவர் முற்பட்டபோது பந்து நேராக காலில் மோதியது. இதனால் எல்பிடபள்யூ என்ற முறையில் அவுட்டானார் ஜெய்ஷ்வால். பிங்க் பந்தில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இது ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாகவும் பின்னடைவாகவும் அமைந்தது.

கேஎல் ராகுல் நோ பாலில் அவுட்

இருப்பினும் இப்போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த சுப்மன் கில், கேஎல் ராகுலுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கில் தெளிவான ஷாட்டுகளை ஆடியபோதும் ராகுலின் ஆட்டத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தது. அந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் பந்துவீச்சாளர் போலண்ட் துல்லியமாக பந்துவீச, அது கேஎல் ராகுல் பேட்டில் பட்டதுபோல் தெரிந்தது. ராகுலும், அவுட் என நினைத்து பெவிலியனை நோக்கி நடையை கட்டினார். ஆஸ்திரேலிய வீரர்கள் கேஎல் ராகுல் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, எட்ஜ் காண்பிக்கும் ஸ்நிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் படவில்லை என தெரிந்தது. 

மூன்றாவது நடுவர் இது குறித்து பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த பந்தை பவுலர் போலண்ட் நோபாலாக வீசியதும் தெரிந்தது. இதனையடுத்து ராகுல் அவுட் இல்லை என உறுதி செய்து அவர் மீண்டும் பேட்டிங் ஆட களத்துக்கு வந்தார். 64 பந்துகள் விளையாடிய அவர் 37 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 31 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுக்க, மிடில் ஆர்டரில் களம் கண்ட விராட் கோலி 7 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

இந்திய அணிக்கு சிக்கல்

இதனால் இந்திய அணி பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டது. அதாவது 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்த இந்திய அணி 84 ரன்களுக்குள் 4 விக்கெட்டை பறிகொடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோர் இப்போது களத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அமைக்கும் பார்ட்னர்ஷிப்பே இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தீர்மானிக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.