மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 – ம் ஆண்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சி.பி.சி.ஐ.டி- க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தரப்பில் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சி பட்டியலில் உள்ளவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் தோழி சசிகலா , அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரையும் சாட்சி பட்டியலில் இணைத்து அவர்களிடமும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இது குறித்து தெரிவித்த எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் முனிரத்தினம், விஜயன் ஆகியோர், “அப்போதைய நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர், எஸ்.பி முரளி ரம்பா, கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், சஜீவன், மின்வாரிய அதிகாரி என 9 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம்.
கொடநாடு எஸ்டேட் மேனேஜரைத் தவிர வேறு யாரிடமும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். 9 பேரிடமும் விசாரணை நடத்த அனுமதி கிடைத்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரிடம் விசாரணை நடத்தினால் பல மர்மங்களுக்கு நிச்சயம் விடை கிடைக்கும்” என்றனர்.