சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள்: வெளியேறிய ராணுவம் – நடப்பது என்ன?

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக தராவில் இருந்துதான் கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் சிரியாவின் ராணுவம் இழந்திருக்கும் நான்காவது மிகப் பெரிய நகரம்தான் தரா. கடந்த மாத இறுதியில் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதைடுத்து, கடந்த வியாழக்கிழமை ஹோமா நகரையும், வெள்ளிக்கிழமை சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர்.

கடந்த 2011-ம் ஆண்டு தராவில் உள்ள பள்ளிச்சுவர்களில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான வாசகங்கள் எழுத்தப்பட்டதற்காக, ஒரு சிறுவர்கள் குழு பிடித்து வைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டதால் எழுந்த மக்களின் கோபத்தை தணிக்க அரசு தவறியதால் ஏற்பட்ட கிளர்ச்சியால் சிரியாவின் ஆரம்பக் கால போரில் தரா புரட்சியின் தொட்டில் என்று அழைப்படுகிறது.

ஸ்வீடா நகராமனது, சிரியாவின் ட்ரூஸ் சிறுபான்மையினரின் மையப்பகுதி ஆகும். அங்கு வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்து விட்டதாலும், ட்ரூஸ் இளைஞர்கள் கட்டாய ராணுவச் சேவைகளுக்கு இணங்க மறுத்துவிட்டதாலும் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக ஸ்வீடா, அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு சாட்சியாக இருந்து வருகிறது.

தரா மற்றும் ஸ்வீடா நகரங்கள் கிளர்ச்சிப் படைகளின் வசம் வந்திருப்பதன் மூலம், சிரிய ராணுவப் படைகள் டமாஸ்கஸ், ஹோம்ஸ், லடாகிய மற்றும் டர்டஸ் ஆகிய நகரங்களில் மட்டுமே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தரா பகுதி என்பது தலைநகரில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கிளர்ச்சி படை வெள்ளிக்கிழமை டெலிகிராமில் வெளிட்டுள்ள பதிவொன்றில், “நாங்கள், தலைநகர் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிக்கு இடையில் இருக்கும் ஹோம்ஸ் நகரின் விளிம்பில் நிற்கிறோம். ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டவுடன் ஆசாத்தின் படை வலிமையாக இருக்கும் கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் துண்டிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில மணி நேரங்களாக சிரிய பகுதிகளில் கிளர்ச்சிப் படைகள் குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. அதனால், ஒரேநாளில் நான்கு முக்கிய மாகாணங்களின் தலைநகரங்கள் வீழ்ந்துள்ளன என்று சுயாதீன பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை சிரியாவிலுள்ள இந்தியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “சிரியாவை விட்டு இந்தியர்கள் கிடைக்கும் விமானங்கள் மூலம் விரைவாக வெளியேற வேண்டும். வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரக ஹெல்ப்லைன் எண்களில் இந்தியர்கள் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ்-அப் மற்றும் இமெயில் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்” என்று கூறியுள்ளது.

முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை கூறுகையில், “வடக்கு சிரியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சண்டையை தொடர்ந்து அங்கு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுடன் எங்கள் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது” என்றார்.

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்யாவும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 92 ஆக சுருங்கிவிட்டது. இவர்களில் 14 பேர் ஐ.நா. அமைப்புகள் மற்றும் என்ஜிஓ.க்களில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.