சிரியாவில் கிளர்ச்சிப் படையால் பதற்றம்: இந்தியர்கள் வெளியேற வெளியுறவு அமைச்சகம் அறிவுரை

புதுடெல்லி: சிரியாவில் தலைநகரை நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள சுமார் 90 இந்தியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், அதிபர் பஷார் அல்-ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சிப் படை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாத இறுதியில் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால் அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

இதைடுத்து கடந்த வியாழக்கிழமை ஹோமா நகரையும், வெள்ளிக்கிழமை சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர். 2011-ல் இருந்து முதல்முறையாக அலெப்போ மற்றும் ஹாம்ஸ் நகரங்கள் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. தற்போது தலைநகர் டமாஸ்கர் செல்லும் நெடுஞ்சாலையில் கிளர்ச்சிப் படைகள் முன்னேறி வருகின்றன.இந்நிலையில், சிரியாவில் இருந்து சுமார் 90 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “சிரியாவை விட்டு இந்தியர்கள் கிடைக்கும் விமானங்கள் மூலம் விரைவாக வெளியேற வேண்டும். வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரக ஹெல்ப்லைன் எண்களில் இந்தியர்கள் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ்-அப் மற்றும் இமெயில் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்” என்று கூறியுள்ளது.

முன்னதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை கூறுகையில், “வடக்கு சிரியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சண்டையை தொடர்ந்து அங்கு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுடன் எங்கள் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது” என்றார்.

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்யாவும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 92 ஆக சுருங்கிவிட்டது. இவர்களில் 14 பேர் ஐ.நா. அமைப்புகள் மற்றும் என்ஜிஓ.க்களில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.