“திமுக நடத்துவது மன்னராட்சி அல்ல” – ஆதவ் அர்ஜுனாவுக்கு அமைச்சர் ரகுபதி பதில்

புதுக்கோட்டை: “திமுக நடத்துவது மன்னராட்சி அல்ல, ஜனநாயக ஆட்சியைத் தான் நடத்துகிறது” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.

புதுக்கோட்டையில் இன்று (டிச.7) செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று கூறி வரும் கட்சிக்கு (திமுக) ‘மைனஸ்’தான் கிடைக்கும் என நடிகர் விஜய் கூறியுள்ளார். ‘பிளஸ்’-ஐ, ‘மைனஸ்’ஆக ஆக்கிக் காட்டும் வல்லமை யாருக்கும் இருக்காது. வரும் தேர்தலில் 200 இடங்களில் திமுக கூட்டணி வெல்லும். தன்னோடு விசிக தலைவர் திருமாவளவன் வருவார் என்பது நடிகர் விஜய்யின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், திமுக கூட்டணியில்தான் இருக்கிறேன் என்று திருமாவளவன் தெளிவாக கூறிவிட்டார்.

திமுக மன்னராட்சியை நடத்தவில்லை. ஜனநாயக ஆட்சியைத்தான் நடத்துகிறது. வாரிசு அரசியல் இல்லை. உழைப்பினால்தான் வந்துள்ளோம். திமுகவின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்றுக்கொண்ட தலைவர்தான் ஸ்டாலின். அதேபோலதான், உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்களின் வலியுறுத்தலினால் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. வாரிசு என்ற அடிப்படையில் அவருக்கு துணை முதல்வர் பதவி வரவில்லை.

விஜய் பேசியது குறித்து ‘சினிமா செய்திகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை’ என்று துணை முதல்வர் கூறி இருக்கிறார். ஏனெனில், அரசியலில் நடிகர் விஜய் அந்த அளவுக்கு வளரவில்லை. ஆகையால், அவரது பேச்சுக்கு கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

திமுக தலைவர் திராவிட மாடலை முன்னெடுத்துச் செல்லும் கருத்தியல் தலைவர்தான்.வேங்கைவயல் விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது. டிஎன்ஏ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று கூறுகிறார்களென்றால், நாங்கள் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அந்த விவகாரத்தில் அமைச்சரோ, எம்எல்ஏவோ குறுக்கீடு செய்யவில்லை.

கூட்டணியை விமர்சிக்கும் வகையில் விசிக ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக விசிகவில் இருந்து அவரை நீக்குவதெல்லாம் அந்தக் கட்சியின் உள் விவகாரம். அதைப் பற்றி எதையும் நாங்கள் வெளியில் இருந்து அந்தக் கட்சிக்கு ஆலோசனை கூற முடியாது. ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண், கருத்து தெரிவித்து இருப்பதை டிஜிபி பார்த்துக்கொள்வார். தனி மனிதன் தன்னுடைய உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு அரிசியல் சட்டத்தில் இடம் உண்டு. எனினும், மத்திய அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அதானியோடு அதிமுக ஆட்சியில்தான் கடந்த 2014-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டதே தவிர, திமுகவில் அல்ல. முல்லைப் பெரியாறு அணையை தமிழக பொறியாளர்கள் பராமரித்து வருகின்றனர்” என்றார் அமைச்சர் ரகுபதி.

முன்னதாக, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான்விடும் எச்சரிக்கை. நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்று பேசினார்.

அதே நிகழ்வில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, தமிழகத்தை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். கொள்கை பேசிய கட்சிகள் இதுவரை அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை. 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.