சென்னை: “பாஜக இரண்டு சதவீத கட்சி அல்ல. 12 கோடி மக்களின் இதயங்களை இணைத்து உலகின் மிகப் பெரிய கட்சியாக செயல்பட்டு இந்தியாவை ஆளுகின்ற கட்சி. பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் ஆதவ் அர்ஜுனா செய்த சட்டவிரோத நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்களை மக்களின் முன்னே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் எச்சரிக்க விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த லாட்டரி பணத்தில் நடக்கும் விழாவில் உள்ள அரசியல் சூழ்ச்சியை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை கோட்பாடுகளை வாழ்வியல் நெறிகளை தமிழகம் முழுக்க கொண்டு செல்வதற்கு நல்லவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். திருமாவளவன் ஏமாந்தது போல்,விஜய்யும் ஏமாந்து விடக்கூடாது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஊழல் கட்சிகளுக்கும்,வாரிசு அரசியலுக்கும், மதவாத வகுப்புவாத, பிரிவினைவாத சிந்தனை கொண்ட இயக்கங்களுக்கும் இடம் அளிக்காமல் தமிழகத்தின் வளர்ச்சியை முன்னுறுத்தி வாக்களிக்கும் வகையில் மிக விழிப்புடன் தமிழக மக்கள் செயல்பட வேண்டும். மிக முக்கியமாக பல ஏழை குடும்பங்கள் தமிழகத்தில் நடுத்தெருவில் நிற்பதற்கு காரணமாக இருந்த லாட்டரி அதிபர்கள் கொள்ளையடித்த ஊழல் பணத்தில் அரசியல் செய்யத் துடித்து, கார்ப்பரேட் அரசியல்வாதிகளாக மாறி வருவதற்கு ஆதரவு கொடுக்கும் அரசியல் இயக்கங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
நேற்று தனியார் செய்தி நிறுவன பதிப்பகம் மற்றும் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனங்கள் இணைந்து நடத்திய எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் லாட்டரி கம்பெனி மன்னன் ஆதவ் அர்ஜுனா குறித்து வெளியான காணொளியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்த ஐ-பாக் நிறுவனத்தையும் அதன் நிறுவனர் பிரசாந்த் கிஷோருடன் இணைத்து லாட்டரி மன்னன் ஆதவ் அர்ஜுனா திமுகவின் வெற்றிக்கும், தமிழகத்தில் தற்போதைய மன்னர் ஆட்சி முறைக்கும் மக்கள் விரோத ஊழல் திமுக அரசு அமைய காரணமாக துடிப்புடன் செயலாற்றிய முக்கியமான கருவி ஆதவ் அர்ஜுனா என்பதை மறைமுகமாக கூறி புகழாரம் சூட்டியிருந்தனர்.
மேலும் அதே மேடையில் கொஞ்சம் கூட வெட்கமும் இல்லாமல் கூச்சப்படாமல், நடிகர் விஜய் பாணியில் சொல்வதென்றால், அங்கு நடத்தப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவும், நடிகர் விஜய்யின் வெற்றி கழகத்தின் ஒட்டுமொத்த இமேஜ் மைனஸ் ஆவதை பற்றி கவலைப்படாமல் ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில் இனி தமிழகத்தில் திமுகவின் மன்னராட்சி அகற்றப்பட வேண்டும். 2026-ல் மீண்டும் திமுகவின் மன்னராட்சி அமையக்கூடாது என்று விஜய் என்ற மிகச்சிறந்த நடிகரை தன் முன்னே வைத்துக் கொண்டு, தானும் தன்னுடைய பங்குக்கு மிக சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார்.
திமுகவை ஆட்சியில் கொண்டு வந்தவன் நான் என்று தன்னை அந்த விழாவில் அறிமுகப்படுத்த வைத்த ஆதவ் அர்ஜுனா, தான் இதற்கு முன்பு 2021 தேர்தலில் பணக்கார வியாபார கொத்தடிமையாக தேர்தல் வியூக அமைப்பாளராக வேலை பார்த்த திமுக கட்சியையும், ஆட்சியையும், தன்னுடைய பங்காளி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக கண்டனம் செய்து, நாடக நடிகர்கள் மற்றும் சினிமா நடிகர்களையும் மிஞ்சும் விதமாக விமர்சித்து பேசியிருந்தார். 2021-ல் ஸ்டாலின் வெற்றிபெற பணியாற்றி விட்டு 2026-ல் உதயநிதி முதல்வர் ஆகக் கூடாது என்று பொய் பேசுவதில் பெரும் குழப்பமும் தமிழக அரசியலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற நல்ல இயக்கங்களை சிதைக்க வேண்டும் என்ற சதியும் உள்ளது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதவ் அர்ஜுனா, பாஜக இரண்டு சதவீத (2%) கட்சி அல்ல. 12 கோடி மக்களின் இதயங்களை இணைத்து உலகின் மிகப்பெரிய கட்சியாக செயல்பட்டு இந்தியாவை ஆளுகின்ற கட்சி. மேலும் இந்திய தாய் திருநாட்டை காக்கும் சக்தியாக கோடிக்கணக்கான தொண்டர்களின் தெய்வீகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் செய்த சட்டவிரோத நடவடிக்கைகளை, பணப்பரிமாற்றங்களை தமிழக மக்களின் முன்னே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும்.
திமுக உங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு பெற முயற்சி செய்து அது கிடைக்கவில்லை என்பதால், பல லட்சம் கோடி லாட்டரி பணத்தை காப்பாற்ற ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து அதிகாரத்தை பெறுவதற்காக நீங்கள் நடத்திய அரசியல் நாடகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மன்னர் ஆட்சி முறை இருக்கக் கூடாது.வாரிசு அரசியல் கூடாது என்று களம் கண்டு வெற்றி பெற்ற இயக்கம் பாஜக.
தமிழகத்திலும் திமுகவின் மன்னராட்சி முறையை ஒழித்து, ஊழலுக்கும், வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மக்கள் விரோத விரோத ஆட்சியை அப்புறப்படுத்துவது தான் நம் அனைவரின் முதல் பணி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மனம் என் மக்கள் யாத்திரை’ மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு ஆதரவாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை 18.5 சதவீதம் வாக்குகள் மூலம் தமிழக பாஜக கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆக்டோபஸ் போன்று ஒரு கொடிய அரக்க சக்தியாக தமிழகத்தையும் தமிழக மக்களையும் சுரண்டிக் கொண்டிருக்கும் திமுகவை அகற்றும் வகையில், தமிழக பாஜக அமைக்கின்ற கூட்டணி உருவாகும். தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் மக்கள் இறைவனிடம் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டு வருகிறார்கள். ஆவலோடு வாக்களிக்க காத்திருக்கிறார்கள்.
தமிழர்களின் உள்ளங்களிலும் தமிழகத்தின் இல்லங்களிலும் நல்லாட்சியை வழங்க கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக தாமரை சின்னமும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி வழங்கிய லட்சக்கணக்கான கோடி மக்கள் நல திட்டங்களும் வீற்றிருக்கின்றன. மக்கள் விரோத தீய சக்தி திமுகவின் கூட்டணியை வீழ்த்துகின்ற பணியை தமிழக பாஜக அமைக்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தளபதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செவ்வனே தன் கடமையை செய்து முடிப்பார்,” என்று அவர் கூறியுள்ளார்.