“நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளாதது எனது சுதந்திரமான முடிவு” – திருமாவளவன்

சென்னை: “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகமால் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில், திருமாவளவன் மனது முழுக்க முழுக்க எங்களோடு தான் இருக்கும், என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய்யின் மனது மேடையில் இல்லை. என்னை நோக்கியே இருந்திருக்கிறது, என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் மேடையில் இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்பதை எண்ணிக்கொண்டே இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் அவருக்கு வருத்தம். ஒரு ஆதங்கம், அதனால் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை.

விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. கட்சியின் நலன், கூட்டணியின் நலன் கருதி சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகமால் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு எடுத்த முடிவு. இந்த விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு, தவெக தலைவர் விஜய் கூறுவது போல எந்த அழுத்தமும், காரணமும் இல்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. தொடக்கத்திலேயே பதிப்பகத்தாரிடம் இதுகுறித்து விளக்கி கூறியிருக்கிறேன்.

விஜய்யும் நானும் ஒரே மேடையில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிற சூழல் இருந்தால், இதைவைத்து அரசியல் செய்யக்கூடிய சிலர், அல்லது அதற்கான செயல்திட்டத்தை வகுத்துக் காத்துக்கொண்டிருக்கிற சிலர், திரிபுவாதம் செய்வதற்கும், திசை திருப்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதற்கு இடம் தரக்கூடாது என்ற அடிப்படையில் ஒரு தொலைநோக்குப் பார்வையோடுதான் இந்த முடிவை எடுப்பதாக விளக்கி கூறியிருந்தேன். விஜய் குறிப்பிடுவது போல திமுகவோ, அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளோ, எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. அவ்வாறு அழுத்தத்துக்குப் பணிந்து, இணங்கி முடிவெடுக்க முடியாமல் தேங்கி நிற்கிற நிலையில் விசிகவும், நானும் இல்லை.” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.