புதுடெல்லி: கத்தோலிக்க திருச்சபையால் ஜூபிலி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள 2025-ம் ஆண்டுக்குப் பின்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் ஃபிரான்சிஸின் இந்திய வருகை இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய சிறுபான்மையினர் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ” போப் பிரான்சிஸுக்கு இந்தியா சார்பில் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேரடியாக போப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். வாடிகன் தேவாலயம், 2025-ம் ஆண்டை ஏசு கிறிஸ்து பிறப்பின் ஜூபிலி ஆண்டாக கொண்டாட இருக்கிறது. அதனால் அந்த ஆண்டு (2025) முழுவதும் போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டுவிட்டன என்று வாடிகன் தெரிவித்துள்ளது.
ஜூபிலி ஆண்டுக்கு பின்பு போப்பாண்டவர் இந்தியா வருவார். மிக விரைவாக அவர் இந்தியா வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மற்ற விஷயங்கள் மற்றும் நடைமுறைகளையும் வாடிகன்தான் முடிவு செய்யவேண்டும். போப் பிரான்சிஸின் இந்திய வருகை அவரின் வசதிப்படி திட்டமிடப்படும். பிரதமர் மோடியும், இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தினரும் போப்பின் இந்திய வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் தெற்கு இத்தாலியின் அபுலியாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் அவுட் ரீச் அமர்வின்போது போப் ஃபிரான்ஸிஸை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போப்பாண்டவரால் கார்டினலாக அறிவிக்கப்பட்ட ஆர்ச்பிஷப் ஜார்ஜ் ஜேக்கப் கூவாகட்டின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வாடிகன் சென்ற குழுவில் மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் அங்கம் வகித்தார். கேரளாவைச் சேர்ந்த கூவாகட் (51), கடந்த 2020-ம் ஆண்டு முதல் போப் ஃபிரான்சிஸின் சர்வதேச பயணங்களை ஒருங்கிணைத்து வருகிறார். மேலும் கார்டினலாக பதவி உயர்த்தப்பட்ட 21 பேரில் இவரும் ஒருவர். முன்னதாக, மன்சிஞ்னார் என்ற பட்டத்துடன் அழைப்பட்டு வந்த கூவாகட், துருக்கியின் நிசிபிஸின் ஆர்ச்பிஷப்பாக நியமிக்கப்பட்டார்.