விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ம் தேதி கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டம் வரலாறு காணாத மழைப் பொழிவை சந்திக்க நேரிட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணை, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதோடு, அதிகன மழை பொழிவின் காரணமாக பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம், திருவெண்ணைநல்லூர் , அரகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பொதுமக்களின் உடைமைகள், நெல், கரும்பு, வாழை, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் சேதமடைந்து பெரும் இழப்புகளை சந்திக்க நேரிட்டது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வகையில் மத்திய குழுவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நியமிக்கப்பட்ட மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்ய சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்தனர். முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடக் கட்டிடத்தையும், அதில் வைக்கப்பட்டு சேதமடைந்திருந்த விளைப் பொருட்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அய்யங்கோயில் பட்டு அருகே உள்ள வெள்ளத்தால் சேதமடைந்த பம்பை ஆற்றையும் ஆய்வு செய்த மத்திய குழுவினர், விழுப்புரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று அங்கு நடைபெற்ற அனைத்து துறை அரசு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு வெள்ள சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் இருவேல்பட்டு, அரசூர், திருவெண்ணைநல்லூர், சிறுமதுரை, கூரானூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய விவசாய உழவர் நலத்துறை இயக்குநர் பொன்னுசாமி தலைமையிலான 4 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், வயலாமூர், சென்னகுணம், கருங்காலிப்பட்டு, ஆயந்தூர், நெற்குணம், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரே நாளில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மத்திய குழுவினர், நெய்வேலிக்கு புறப்பட்டுச் சென்றனர். நாளை கடலூர் மாவட்டத்தில் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வறிக்கையை ஓரிரு நாளில் மத்திய அரசிடம் இக்குழுவினர் வழங்குவார்கள் என தெரிகிறது.
இந்த ஆய்வு குழுவில் மத்திய நிதித்துறை இயக்குனர் சோனாமணி அவுபம், மத்திய ஜல்சக்தி இயக்குனர் சரவணன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச் கேட்டி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோருடன் அரசு முதன்மை செயலாளர் அமுதா ,ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.