மாணவர்கள் சின்னஞ்சிறு செடிகள் போன்றவர்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அன்பெனும் நீர்ப் பாய்ச்சி, உத்வேக வார்த்தைகள் என்னும் உரமிட்டு, தவறுகிற நேரங்களில் கண்டிப்புச் சூரியனாக இருக்கும்போதுதான், மாணவர்கள் சந்தோஷமாக வளர்வார்கள். அந்தச் சந்தோஷம் அவர்களை எத்தனையோ விஷயங்களைச் சாதிக்க வைக்கும். இத்தனை பெரிய பொறுப்பில் இருக்கிற பெற்றோர்களும் ஆசிரியர்களும் என்னென்ன செய்தால் பிள்ளைகளை ‘ஹேப்பி ஸ்டூடண்ட்’டாக வளர்க்க முடியும்? ஸ்கூல் கவுன்சிலர் திவ்யப்பிரபாவிடம் கேட்டோம்.
பெற்றோர்களின் பங்களிப்பு…
* பிள்ளைகள் எது செய்தாலும், ‘இதைப் பண்ணாதே, நான் சொல்வதை மட்டும் செய்’ என்று, அந்த இளங்கிளைகளின் தலையில் கொட்டிக் கொண்டே இருக்காதீர்கள். வளர்ச்சி பாதிக்கப்படும்.
* எப்போதும் ‘படி படி’ என்று அழுத்தம் கொடுக்காதீர்கள். பிள்ளைகள் செய்ய விரும்புகிற எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸை செய்யவும் அனுமதியுங்கள். கிரிக்கெட்டில் விருப்பம் இருக்கிற பிள்ளையை ‘நீ பெரிய தோனி ஆகப் போறியா’ என்று அவர்களுடைய லட்சியங்களின் கால்களைப் பின்னுக்கு இழுக்காதீர்கள்.
* பிள்ளைகள் தனித்துவமானவர்கள். உங்கள் பிள்ளை கத்தரிக்காய் செடியாக இருக்கலாம். அவனை/ளை பக்கத்து வீட்டிலிருக்கும் வேறொடு காய் காய்க்கிற பிள்ளையுடன் ஒப்புமைப்படுத்திப் பேசாதீர்கள்.
* பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன்/ள் ஹேப்பி ஸ்டூடண்ட்டாக இருக்க வேண்டுமென்றால், அவர்களுடைய வீட்டுச் சூழ்நிலை ஹேப்பியாக இருக்க வேண்டும். சந்தோஷமான பெற்றோர்களின் பிள்ளைகளும் சந்தோஷமாக இருப்பார்கள். எப்போதும் வாக்குவாதம், சண்டை என்று பெற்றோர் இருந்தால், பிள்ளைகளின் நிலைமை அய்யோ பாவம்தான்.
* பரீட்சை நேரத்தில் பிள்ளைகள் படிக்கும்போது, சில பெற்றோர்கள் தாங்களும் ஒரு புத்தகத்தைப் படித்தபடி உடனிருப்பார்கள். சிலர் ‘அதுவே படிச்சிட்டு தூங்கப் போயிடும்’ என்பார்கள். படிக்கும்போது பெற்றோர்களின் கம்பெனியை பிள்ளைகள் என்ஜாய் செய்வார்கள். சில பிள்ளைகள் இரவில் கண் விழித்துப் படிக்க விரும்புவார்கள். அவர்களைக் காலையில் படித்தால்தான் மனப்பாடம் ஆகும் என வற்புறுத்துவதுகூட அழுத்தம் தருவதுதான்.
* பிடித்ததைச் சாப்பிடுவது, பிடித்ததைச் செய்வது என்று இருந்தால், மூளையில் இருக்கிற மகிழ்ச்சியைத் தருகிற endorphine hormone சுரக்கும். இந்த ஹார்மோன் சுரக்க, பிள்ளைகளுக்குப் பிடித்ததைச் சாப்பிட விடுங்கள்; பிடித்ததைச் செய்ய விடுங்கள். இந்த ஹார்மோன் சுரக்காதபோதுதான் ஸ்டிரெஸ், டிப்ரஷன், ஆங்சைட்டி எல்லாம் வரும்.
* பிள்ளை எப்போதும் கிளாஸ் ஃபர்ஸ்ட்டாக இருக்க வேண்டும்; அட்லீஸ்ட் 99 சதவிகிதமாவது மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நினைக்கிற பெற்றோர்களின் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பது கடினம்தான். என் பிள்ளையால் இவ்வளவுதான் முடியும்; இதுதான் என் பிள்ளைக்குத் தெரியும்; இதற்கு மேல் என்னுடைய எதிர்பார்ப்பை என் பிள்ளை மேல் திணிக்க மாட்டேன் என்கிற தெளிவு இருக்கிற பெற்றோர்களுடைய பிள்ளைகள் வீடு, ஸ்கூல் என இரண்டு இடங்களிலுமே ஹேப்பியாகத்தான் இருப்பார்கள்.
* சின்ன வயதில் நீங்கள் பட்ட ஆசைகளைப் பிள்ளைகள் மேல் திணிக்காதீர்கள். இதனால் உங்கள் பிள்ளைகளின் தனித்தன்மை வெளியே வராமலே போகும். இதுவும் அவர்களின் சந்தோஷத்தைப் பாதிக்கும்.
* பிள்ளைகளுடன் ஒன்றாக வாக்கிங் போவது, உடற்பயிற்சி செய்வது, இயற்கையை ரசிப்பது இதெல்லாம், அவர்களை உங்களுடன் தோழமையாக உணர வைக்கும். இதுவும் அவர்களுடைய மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க வைக்கும்.
ஆசிரியர்களின் பங்களிப்பு…
* மாணவர்கள் செய்ய விரும்புவதைச் சரியான வழியில் செய்ய விடுங்கள்.
* தப்பைச் சொல்கிற விதம் ஒன்று இருக்கிறது. ஒரு மாணவன் மதிப்பெண் குறைவாக எடுத்தால், அந்த மாணவனை மற்ற எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் நிறுத்தி, திட்டுவதைத் தவிருங்கள். அவர்களை அவமானப்படுத்தாதீர்கள்.
* உங்களிடம் நான்காம் தலைமுறையாகக் கல்விக் கிடைக்கப் பெற்ற மாணவனும் படிப்பான்; முதல் முறையாகக் கல்விக் கிடைக்கப் பெற்ற மாணவனும் படிப்பான். அதனால், அவர்களை கம்பேர் செய்து பேசாதீர்கள்.
* நெகட்டிவ் விமர்சனங்கள் வேண்டாம், படிப்பில் தடுமாறுகிற மாணவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள், சின்ன சின்ன தவறிழைத்தவர்களைத் தனியாகக் கூப்பிட்டுப் பேசுங்கள், மதிப்பெண் குறைந்தால், உனக்கு இந்த பிரச்னை இருக்கிறது என்றோ அல்லது உனக்கு என்ன பிரச்னை என்றோ பேசுங்கள். ‘பாடம் எடுக்கிறதா, இப்படி ஒவ்வொரு மாணவரையும் கூப்பிட்டுப் பேசுவதா’ என்று யோசிக்காதீர்கள். நாற்பது மாணவர்களில் 5 மாணவர்கள்தான் பிரச்னைகளுடன் இருப்பார்கள். அதனால், பிரச்னை உள்ள மாணவர்களுக்குத் தனிக் கவனம் கொடுங்கள். என் ஆசிரியர் என் மீது அக்கறையாக இருக்கிறார் என்கிற எண்ணமே மாணவர்களை ஹேப்பி ஸ்டூண்ட்டாக மாற்றும்’’ என்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…