வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் 20-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்க உள்ளார். டொனால்டு டிரம்புக்கு இந்த தேர்தலில் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பெரிதும் உறுதுணையாக இருந்தார். டிரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ததோடு, டிரம்பின் வெற்றியை உறுதி செய்ய அவரது பிரசார குழுவுக்கு நிதியை வாரி வழங்கினார்.
இந்த நிலையில் தேர்தலின்போது டிரம்பின் வெற்றிக்காக எலான் மஸ்க் மொத்தமாக 270 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,286 கோடி) செலவு செய்தது தற்போது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே அரசியல் கட்சிக்கு அதிகளவில் நன்கொடை கொடுத்தவர் என்கிற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார். எலான் மஸ்க்கிற்கு தனது நிர்வாகத்தில் செயல்திறன் துறையின் தலைவர் என்ற மிக முக்கிய பொறுப்பையும் டிரம்ப் கொடுத்துள்ளார்.