சோசியல் மீடியா மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த சோசியல் மீடியாவில் பழகுபவர்களை மற்றவர்கள் ஏமாற்றும் சம்பவங்களும் நடக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் குமார் அது போன்ற ஒரு மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார். தீபக் குமார் துபாயில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மன்பிரீத் கவுர் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் பழகி காதலிக்க ஆரம்பித்தனர். மூன்று ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக்கொள்ளாமல் ஆன்லைன் மூலம் மட்டும் காதலித்து வந்தனர். இதில் தீபக் குமார் மன்பிரீத் கவுரிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அப்பெண்ணும் அதனை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோருடன் தீபக் குமார் பேசினார். திருமணம் இறுதி செய்யப்பட்டது.
திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தீபக் குமார் துபாயில் இருந்து சொந்த ஊரான ஜலந்தர் வந்தார். திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்தது. அடிக்கடி தீபக் குமார் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணின் பெற்றோரிடமும் பேசினார். திருமணம் மோகா என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தீபக் குமாரும், அவரது உறவினர்களும் திருமணம் நடைபெறும் இடத்திற்கு மேளதாளத்துடன் வந்தனர். ஆனால் அவர்களால் மண்டபத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மணப்பெண்ணின் வீட்டிற்கு போன் செய்து முகவரியை கேட்டதற்கு, அங்கேயே காத்திருக்கும் படியும், தங்களது ஆள் வந்து உங்களை பத்திரமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வருவார்கள் என்று சொன்னார்கள்.
காலையில் வந்த மணமகன் வீட்டார் மாலை 5 மணி வரை காத்திருந்தார்கள். ஆனால் பெண் வீட்டில் இருந்து யாரும் வந்து அழைத்துச்செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தீபக் குமாரும், அவரது குடும்பத்தினரும் அவர்கள் வந்த கிராமத்தில் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட திருமண மண்டபம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். ஆனால் அது போன்ற ஒரு திருமண மண்டபமே அந்த கிராமத்தில் இல்லை என்று அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். இதனால் மணமகன் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். துபாயில் தொழிலாளியாக வேலை செய்யும் தீபக்குடன் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் போன் மூலம் பேசி திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
திருமணத்திற்கு முன்பு மணமகளுக்கு தீபக் குமார் 50 ஆயிரம் ரூபாயை டிரான்ஸ்பர் செய்திருந்தார். இன்ஸ்டாகிராம் காதலியும், அவரது பெற்றோரும் தங்களது மொபைல் போனை ஆப் செய்துவிட்டனர். அதன் பிறகுதான் மோசடி செய்யவே இத்திருமண ஏற்பாடு என்பதை தீபக் குமார் தெரிந்து கொண்டார்.
தீபக் குமாரின் தந்தை பிரேம் சந்த் இது குறித்து கூறுகையில்,”திருமணத்திற்கு சமையல்காரர்கள், டாக்சி, வீடியோகிராபர் என அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தோம். திருமணத்திற்கு வரும்படி உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். மணப்பெண் கவுர் தான் பெரோஷாபூரில் வேலை செய்வதாக சொன்னார். அவரது பெற்றோரிடம் பல முறை போனில் பேசிய பிறகுதான் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தோம்” என்று ஆதங்கப்பட்டார்.
தீபக் குமாரும் அவரது பெற்றோரும் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று கவுரும், அவரது குடும்பத்தினரும் ஏமாற்றியது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சப் இன்ஸ்பெக்டர் ஹர்ஜிந்தர் தெரிவித்தார்.