புதுடெல்லி: உ.பி. முசாபர் நகர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சஜாத் அலிகான் என்பவருக்கு சொந்தமான நிலம் இருந்தது. இவர், பாகிஸ்தான் முதல் பிரதமர் லியாகத் அலிகானின் சகோதரர். இவர்கள் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தனர்.
அதன்பின்னர், அங்கிருந்த ருஸ்தம் அலிகான் என்பவர் பெயருக்கு நிலம் பெயர் மாற்றப்பட்டது. இவரும் பாகிஸ்தானுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், யாருடைய பயன்பாட்டிலும் இல்லாத அந்த நிலத்தில் அப்பகுதி மக்கள் மசூதி கட்டி தொழுகை நடத்துகின்றனர். இந்த மசூதி பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகானின் பெயரில் அழைக்கப்படுகிறது.
இச்சூழலில், இந்து சக்தி சங்கடன் என்ற உ.பி இந்துத்துவா அமைப்பின் தலைவர் சஞ்சய் அரோரா, அனுமதி பெறாமல் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும் மசூதியை சுற்றி சட்டவிரோதமாக கடைகள் கட்டி வாடகை வசூலிப்பதாகவும் 6 ஆண்டுகளுக்கு முன்பு முசாபர் நகர் வளர்ச்சி ஆணையத்திடம் புகார் தெரிவித்தார்.
அரோராவின் புகார் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சக உத்தரவின்படி மசூதி குறித்து ஆய்வு செய்ய விசாரணை குழு அமைக்கப்பட்டது. முசாபர் நகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, 18 மாதங்களுக்கு பின்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இருதரப்பினர் இடையேயும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நிலம் இன்னும் சஜாத் அலிகான் பெயரில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மசூதி அமைந்த நிலம் முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள எதிரி நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி முஸ்லிம்கள் நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.
யார் இந்த லியாகத்? உ.பி.யில் பிறந்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சட்டம் பயின்றவர் லியாகத் அலிகான் சுதந்திரப் போராட்ட அரசியலில் குதித்தவர் முஸ்லிம் லீக் கட்சிக்கு மாறினார். பாகிஸ்தான் பிரிவினைக்காக முகமது அலி ஜின்னாவுடன் இணைந்து லியாகத் அலி கானும் செயல்பட்டார்.
பிறகு 1947-ல் பாகிஸ்தானின் முதல் பிரதமராகவும் லியாகத் பதவி ஏற்றார். இவர் பாகிஸ்தானின் ராவல்பிண்டியின் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாதவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.