புதுடெல்லி: ஓசிசிஆர்பி அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படவில்லை என பாஜகவின் புகாருக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம் (ஓசிசிஆர்பி) என்பது புலனாய்வு பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச ஆகும். இந்த அமைப்பு திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழல் தொடர்பான கட்டுரைகளை ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், ஓசிசிஆர்பி அமைப்புக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும் இந்த அமைப்புக்கு கோடீஸ்வர நன்கொடையாளரான ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி வழங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை மேற்கோள் காட்டி, இந்தியாவுக்கு எதிரான மற்றும் பிரதமர் மோடி, தொழிலதிபர் கவுதம் அதானியை புகழை கெடுக்கும் வகையிலான செய்திகளை ஓசிசிஆர்பி அமைப்பும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் பரப்புவதற்காக பாஜக குற்றம்சாட்டியது. இதற்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் குற்றம் சாட்டியது. குறிப்பாக ஓசிசிஆர்பி அமைப்புக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையின் யுஎஸ்ஏஐடி, ஜார்ஜ் சோரஸ் மற்றும் ராக்பெல்லர் பவுண்டேசன் ஆகியவை நிதியுதவி வழங்குவதாகவும் பாஜக குற்றம்சாட்டியது. இதைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, இந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் நேற்று முன்தினம் கூறும்போது, “எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் பத்திரிகை சுதந்திரம் மிகவும் அவசியம்ம். இது ஆக்கபூர்வமான விவாதத்தை செயல்படுத்துவதுடன் அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்க வழிவகுக்கிறது. பத்திரிகையாளர்களின் தொழில் முறை மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு இணைந்து செயல்படுகிறது. அதேநேரம், அவர்களின் செய்தி வெளியிடும் கொள்கையில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அமெரிக்கா ஊடக சுதந்திரத்தின் சாம்பியனாக இருந்து வருகிறது” என்றார்.
இந்த குற்றச்சாட்டு தவறானது என ஓசிசிஆர்பி அமைப்பும் தெரிவித்துள்ளது. நன்கொடையாளர்கள் எங்கள் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. எங்கள் குழுவினர் துல்லியமான செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.