பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஜெயநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சென்னப்பனபாளையாவை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்தநிலையில் மஞ்சுநாத், சிறுமியை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். ஆனால் சிறுமியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதனால் விரக்தியடைந்த மஞ்சுநாத் சிறுமியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது அக்கம்பக்கத்தினர் மஞ்சுநாத்தை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நள்ளிரவு சிறுமியின் வீட்டிற்கு மீண்டும் சென்ற மஞ்சுநாத், அவளது வீட்டின் முன்பு இருந்த கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜெயநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.