ஒவ்வொரு ஆண்டு நிறைவடையும் போது, கார் மற்றும் பைக் ஷோரூம்கள் பலவித ஆபர்களை வழங்குகின்றனர். மக்கள் புதிய கார் வாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக மாறுகிறது. பழைய ஸ்டாக்கை வெளியேற்றுவதற்கு கார் மற்றும் பைக் நிறுவனங்கள் இதுபோன்ற ஆபர்களை வழங்கி வருகின்றனர். இந்த சமயத்தில் உங்கள் பழைய காருக்கு கூடுதல் பணம், தள்ளுபடிகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் மக்கள் விரும்பும் காரில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். சில சமயங்களில் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் கூட விலை குறையும். மஹிந்திரா நிறுவனம் தங்களின் சில கார்களில் ரூ. 3.70 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது.
ஆண்டின் இறுதியில் கார்களில் பெரிய தள்ளுபடிகளைப் பார்க்கும்போது, உடனடியாக பணத்தைச் சேமிக்க இது ஒரு சிறந்த வழியாகத் தோன்றும். ஆனால் இதனால் எதிர்காலத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் கார்கள் விலை குறைவாக இருக்க காரணம் புதிய மாடல்களை சந்தையில் கொண்டு வருவதற்கு தான். அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் தயாரிக்கப்படும் கார், ஜனவரி வந்தவுடன் ஒரு வருடம் பழமையானதாக பார்க்கப்படும். இது புதிய மாடல்களை விட பழையதாகக் கருதப்படுவதால், அந்த காரின் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு கார் டிசம்பர் 2024ல் தயாரிக்கப்பட்டால், அது ஜனவரி 2025ல் ஒரு வருடம் பழமையானதாக கருதப்படும். இது அவற்றின் மறுவிற்பனை மதிப்பையும் பாதிக்கிறது.
ஆண்டின் இறுதியில் வாங்கப்படும் கார் புதியதாக இருந்தாலும் அதன் மதிப்பை மிக விரைவாக இழக்கிறது. ஒரு வருடத்திற்குப் பிறகு நீங்கள் அதை விற்க முடிவு செய்தால், அது இரண்டு வருட பழைய காராக பார்க்கப்படலாம், எனவே நல்ல தொகைக்கு விற்பனை ஆகாது. இதனால் நீங்கள் நிறைய பணத்தை இழக்க நேரிடும். எனவே, நல்ல ஆப்பரில் காரை வாங்கி இருந்தாலும், பின்னர் அதை விற்க முயற்சிக்கும் போது நீங்கள் நிறைய இழக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
VIN எண்
வாகன அடையாள எண் அல்லது VIN என்பது ஒவ்வொரு காருக்கும் ஒதுக்கப்பட்ட ஒரு தனித்துவமான குறியீடாகும். கார் எப்போது தயாரிக்கப்பட்டது போன்ற முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. இந்த எண்ணின் 10 மற்றும் 11 வது பகுதிகள் கார் தயாரிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாதத்தை தெரிவிக்கின்றன. ஓர் ஆண்டின் இறுதியில் புதிய காரை வாங்குவது பற்றி யோசிப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் இது கார் எவ்வளவு பழையது என்பதைக் கண்டறிய உதவுகிறது. ஆண்டின் இறுதியில் கார் வாங்குவது பற்றி யோசிக்கும்போது, நல்ல மற்றும் கெட்டதை பற்றி யோசித்து பார்ப்பது முக்கியம்.
ஹூண்டாய், நிசான், ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சில கார் நிறுவனங்கள் ஜனவரியில் இருந்து தங்கள் விலையை சுமார் 3% உயர்த்த முடிவு செய்துள்ளன. ஆண்டின் இறுதியில் கார் அல்லது பைக் வாங்கலாமா என்பது உங்களது விருப்பம், ஆனால் நீங்கள் கவனமாக சிந்தித்து முன்கூட்டியே திட்டமிட்டால், பணத்தை சேமிக்க முடியும்.