Rishabh Pant, IPL 2025 Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர் மீது தற்போதே அதிகம் எதிர்பார்ப்பு இருக்கிறது. தோனி மற்றுமொரு சீசனை விளையாட இருக்கிறார். ரோஹித் சர்மா மும்பையில் தொடர்கிறார். விராட் கோலி கேப்டனாகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 2020இல் டெல்லி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்ற ரிக்கி பாண்டிங் – ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி தற்போது பஞ்சாப் அணியில் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது, கேஎல் ராகுல் தற்போது டெல்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார்.
குறிப்பாக, ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ஏலம்போன இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார் எனலாம். ரிஷப் பண்ட் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் ஆவார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து டெல்லி அணியில் விளையாடி வந்த நிலையில், கடந்த 4 சீசன்களாக கேப்டனாகவும் செயல்பட்டார்.
பணத்திற்காக வெளியேறவில்லை – ரிஷப் பண்ட்
இருப்பினும், இந்த மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் டெல்லி அணியால் தக்கவைக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியாகாமல் இருந்தது. ஒரு அணி மொத்தம் 6 வீரர்களை தக்கவைக்கலாம் என்றும் அதில் குறைந்தபட்சம் 4 Capped வீரர்கள், குறைந்தபட்சம் 1 Uncapped வீரரையாவது தக்கவைக்க வேண்டும். இந்த 6 பேரை தக்கவைக்க ஒரே அணி தனது ரூ.120 கோடி ஏலத்தொகையில் இருந்து ரூ.79 கோடியை செலவழிக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் கூறின.
அப்படியிருக்க, ரிஷப் பண்ட் பணத்திற்காக வெளியேறி இருக்கலாம் என பேசப்பட்டது. இந்திய மூத்த பேட்டர் சுனில் கவாஸ்கர் இதுகுறித்து பேசிய வீடியோவுக்கு தனது X தளத்தில் ரிஷப் பண்ட் கமெண்ட் செய்திருந்தார். அதாவது அதில், தான் தக்கவைக்கப்படாததற்கு பணம் காரணம் இல்லை என்றும் அதை மட்டுமே தன்னால் சொல்ல முடியும் என்றும் ரிஷப் பண்ட் பதிவிட்டிருந்தார். இதன் பின்னரே ஏலமும் நடைபெற்றது.
சந்தை மதிப்பை அறிய வெளியேறினார்
இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான ஹேமங் பதானி ரிஷப் பண்டை தக்கவைக்காததற்கான காரணத்தை, கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியன் பத்ரிநாத்தின் யூ-ட்யூப் பக்கத்தில் பேசியுள்ளார். அவர் அந்த வீடியோவில்,”அவர் அணியால் தக்கவைக்கப்பட வேண்டாம் என்று விரும்பினார். ஏலத்திற்குச் சென்று தனக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை அவர் அறிய விரும்பினார். நீங்கள் ஒரு வீரரைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அந்த வீரர் மற்றும் அணி நிர்வாகம் ஆகிய இரு தரப்பினரும் சில விஷயங்களில் உடன்பட வேண்டும். நாங்கள் அவருடன் பலமுறை உரையாடினோம். நிர்வாகம் அவருடன் பேச முயற்சித்தது. நிறைய போன் கால்களும் மெசேஜ்களும் சென்றன.
டெல்லி அணி அவரை தக்கவைப்பதில் ஆர்வம் காட்டியது. ஆனால் அவர் ஏலத்திறகு செல்ல வேண்டும் என விரும்பினார். அவருக்கு அணியில் முதல் தக்கவைப்பு வீரருக்கு வழங்கப்படும் ரூ.18 கோடியை வழங்க டெல்லி காத்திருந்தது. ஆனால் அவர் அதை விட அதிகமாக எதிர்பார்த்ததால் ஏலத்திற்கு சென்றார். ஏலத்திலும் அவர் நினைத்ததே நடந்தது. ரூ.27 கோடி கிடைத்துள்ளது. இது அவருக்கு மிகவும் நல்லது. அவர் சிறப்பான வீரர். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை நாங்கள் மிஸ் பண்றோம். ஆனால் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து தானே ஆக வேண்டும்” என்றார்.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
டெல்லி அணி புதிய தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியையும், அணி இயக்குநராக வேணுகோபால் ராவையும் சேர்த்த பின்னரே ரிஷப் பண்டுக்கு அணி நிர்வாகத்திடம் கருத்து முரண் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரது கேப்டன்ஸி குறித்து அணி நிர்வாகம் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்பட்டது. அப்படியிருக்க தற்போது தனது சந்தை மதிப்பை தெரிந்துகொள்ளவே ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து வெளியேறியிருக்கிறார் என ஹேமங் பதானி கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.