மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை 2027 பிப்ரவரிக்குள் முடிக்க இலக்கு!

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை பிப்ரவரி 2027-ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ஆர்டிஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்டிஐ-ல் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸின் கட்டுமான ஒப்பந்தத்தின்படி தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவு கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டிடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் 1118.35 கோடிக்கு ( ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் கான திட்ட மதிப்பீடு 2021.51 கோடி ஆக நிர்ணயம் செய்யப்பட்டு 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,18,927 ச. மீ பரப்பளவில் மருத்துவமனை கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள், விடுதி கட்டிடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன. தற்காலிக கட்டிடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டிடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், “மதுரை எய்ம்ஸ்-க்கான பிரத்தியேகமாக ஆர்டிஐ இணையதளம் தொடங்கி முதல்முறையாக நாம் எழுப்பிய ஆர்டிஐ கேள்விகளுக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பதில் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை ஆர்டியில் கேட்ட கேள்விகளுக்கு எப்போது தொடங்கும் என்ற தேதி தெரியாமலே இருந்து வந்த நிலையில் தற்போது எப்போது தொடங்கி எப்போது முடியும் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள்.

பிப்ரவரி 2027க்குள் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முழுவதும் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பிப்ரவரி 2015 ல் அறிவிக்கப்பட்டு ஜனவரி 2019 இல் அடிக்கல் நாட்டப்பட்டு ஏறத்தாழ 8 ஆண்டுகள் கழித்து தான் நிறைவேறும் என்பது வருத்தமளிக்கிறது. எனவே மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேலும் தாமதம் செய்யாமல் உரிய நேரத்தில் ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து நிதியைப் பெற்றும், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய திட்ட நிதியையும் உடனடியாக வழங்கி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை குறித்த காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.