மும்பை,
மராட்டியத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து, மராட்டிய முதல் மந்திரியாக பாஜக மூத்த தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். துணை முதல் மந்திரிகளாக சிவசேனா (ஏக்நாத்ஷிண்டே தரப்பு) தலைவர் ஏக்நாத்ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா கடந்த 5ம் தேதி மும்பையின் அசாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு விழாவில் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் நகை, பணம், செல்போன் என 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அசாத் மைதான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.