வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து திடீர் திடீரென எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வங்கி நிர்வாகம் பணத்தை எடுத்துக்கொள்கிறது என்று பலரும் குறைபட்டு கொள்கின்றனர். சிறிய தொகையாக இருந்தால் வாடிக்கையாளர்கள் வங்கி சென்று, அதற்கான காரணத்தை கேட்பதில்லை.
குஜராத்தில் ஜெய்ராம் என்ற வாடிக்கையாளர், அகமாதாபாத்தில் உள்ள யூனியன் வங்கி கிளையில், தனது தாயார் பெயரில் வைப்பு நிதியாக (Bank FD) பணத்தை செலுத்தியுள்ளார். பணத்தை அவர் திரும்ப எடுக்கச் சென்ற போது அதிக அளவில் வரி பிடித்தம் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து ஜெய்ராம் வங்கி மேலாளரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் அடிதடியில் இறங்கினர். ஒருவரது சட்டையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு அடிதடியில் இறங்கினர்.
ஜெய்ராமுடன் வந்த அவரது தாயார் தனது மகனை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அழைத்துச்செல்ல முயன்றார். வங்கியில் இருந்த ஊழியர்கள் சண்டையில் ஈடுபட்ட மேலாளரையும், வாடிக்கையாளரையும் பிரித்துவிட முயற்சி செய்தனர். இறுதியில் ஜெய்ராமை அவரது தாயார் சமாதானம் செய்து சண்டையில் இருந்து விலக்கி அழைத்துச்சென்றார். இது குறித்து வங்கி மேலாளர் போலீஸில் புகார் செய்தார்.
இதே போன்று அகமதாபாத் காந்தி மைதான் அருகில் உள்ள கனரா வங்கியில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. சிபில் ஸ்கோர் தொடர்பாக வங்கியில் மேலாளராக இருந்த பெண் அதிகாரியிடம் வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் வங்கி மேலாளரிடம் இருந்த மொபைல் போனை பிடுங்கி கீழே தூக்கிப்போட்டார். யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்கள். என்னிடம் தவறு செய்துவிட்டீர்கள் என்று கூறி கிழே கிடந்த போனை எடுத்து பெண் அதிகாரியிடம் அந்த நபர் கொடுத்தார். இது குறித்தும் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரு சம்பவங்கள் தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இச்சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.