Guindy Race Course: கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைந்த குளங்கள்… மழைவெள்ள பாதிப்பை தணிக்குமா?

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்பில் புதிதாக நான்கு குளங்கள் அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு அடையாளங்களில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது கிண்டியிலுள்ள ரேஸ் கிளப் மைதானம். சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இம்மைதானம் ஆங்கிலேயர் காலத்தில் குதிரைப் பந்தயம் விடுவதற்காக 1945 -ல் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1970 முதல் 2014 வரையுள்ள வாடகை பாக்கியான சுமார் 730 கோடி 86 லட்சத்தை கட்டத் தவறியதால் தமிழக அரசு குத்தகையை ரத்து செய்து நிலத்தை கையகப்படுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி இம்மைதானத்திற்கு சீல் வைத்தது.

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைந்த குளங்கள்

இந்நிலையில், வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் சீரழிவு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையில், “அருகிலுள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் என்ன?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கான நடவடிக்கைகளில் இறங்குமாறு மாநகராட்சிக்கு அறிவுறுத்தினர்.

இது மட்டுமன்றி சமூக ஆர்வலர்களும் இந்த 160 ஏக்கர் நிலத்தில் நீர்நிலைகளை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் பருவமழை காலங்களில் ஏற்படும் பேரிடர்களில் இருந்து தப்பிக்க சிறந்த ஒரு தீர்வாக இருக்கும் என கூறி வந்தனர்.

அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஏற்கெனவே இங்கு மூன்று குளங்களை அமைத்து இருந்தது. அதில் தற்போது இரண்டு குளங்களை ஆழம் மற்றும் அகலப்படுத்தவும் அதனைத் தொடர்ந்து புதிதாக நான்கு குளங்களை அமைக்கும் பணியிலும் தமிழக அரசு இறங்கியது.

இதற்கான பணிகள் கடந்த அக்டோபர் முதல் நடைபெற்று வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்து இருப்பதாக மாநகராட்சி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

நடந்த வேலைபாடுகளின் விவரம்:

இரண்டு பழைய குளங்களின் தண்ணீர் கொள்ளளவு திறன் – 13,365 கன மீட்டர்/0.47 MCFT (மில்லியன் கன அடி) (ஆழப்படுத்துவதற்கு முன்)

தற்போது 24,285 கன மீட்டர்/0.86 MCFT (மில்லியன் கன அடி)

புதிதாக அமைக்கப்பட்ட நான்கு குளங்களின் விவரம்

குளம் 1: பரப்பளவு – 4,000 சதுர மீட்டர், தண்ணீர் கொள்ளளவு – 20,000 கன மீட்டர்/0.71 MCFT (மில்லியன் கன அடி).

குளம் 2: பரப்பளவு – 3,500 சதுர மீட்டர்,தண்ணீர் கொள்ளளவு – 17,500 கன மீட்டர்/0.62 MCFT (மில்லியன் கன அடி).

குளம் 3: பரப்பளவு – 7,124 சதுர மீட்டர், தண்ணீர் கொள்ளளவு – 35,260 கன மீட்டர்/1.26 MCFT (மில்லியன் கன அடி).

குளம் 4: பரப்பளவு – 7,536 சதுர மீட்டர்,தண்ணீர் கொள்ளளவு – 37,680 கன மீட்டர்/1.33 MCFT (மில்லியன் கன அடி).

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைந்த குளங்கள்
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைந்த குளங்கள்
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைந்த குளங்கள்
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைந்த குளங்கள்

ஆக மொத்தத்தில் 13.5 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்துக்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, ஐந்து பர்லாங்கு சாலை பகுதி என தென்சென்னை பகுதியைச் சேர்ந்த சுமார் 2.50 லட்சம் மக்கள் பருவமழை காலத்தின் போது மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் பயனடைவார்கள் என மாநகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.