பில்லி சூனியம் போன்ற செயல்களுக்கு மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள திலாமோட் என்ற இடத்தில் தலையில்லாத உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் ராஜு குமார் என்றும், பீகாரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
ராஜு குமார் கூலி வேலை செய்து வந்தவர் என்று போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரித்ததில் விகாஸ் மற்றும் தனஞ்சே ஆகியோர் சேர்ந்து இக்கொலையை செய்திருப்பது தெரிய வந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், விகாஸ் நண்பர் நரேந்திரா மூலம் பங்கஜ் மற்றும் பவன் ஆகிய இருவரின் அறிமுகம் கிடைத்தது. இதில் பங்கஜ் மற்றும் பவன் ஆகியோர் தங்களை மந்திரவாதிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். அதோடு மனித மண்டை ஓடு ஒன்றை வழிபட்டால் ரூ.50 கோடி கிடைக்கும் என்று இருவரும் தெரிவித்தனர். இதனால் பணத்திற்கு ஆசைப்பட்டு மண்டை ஓட்டை தேட ஆரம்பித்தனர்.
மண்டை ஓடு எங்கும் கிடைக்காததால் தனது நண்பர் ராஜு குமாரை கொலை செய்ய விகாஸ் திட்டமிட்டார். இதற்காக விகாஸ் தனது நண்பர் ராஜு குமாரை தனது வீட்டிற்கு அழைத்தார். வீட்டில் வைத்து ராஜு குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
பின்னர் தலையை துண்டித்து அதிலிருந்து மண்டை ஓட்டை எடுத்து அதனை நரேந்திராவிடம் கொடுத்தனர். நரேந்திரா அந்த மண்டை ஓட்டை பங்கஜ் மற்றும் பவனிடம் கொடுத்தனர். விகாஸும், தனஞ்சேயும் கொலை செய்யப்பட்ட உடலை திலாமோட் என்ற இடத்தில் போட்டனர். இதையடுத்து பவன், பங்கஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் விசாரித்தபோது இருவரும் யூடியூப்பில் பில்லி சூனியத்தை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். யூடியூப்பில் பில்லிசூனியத்தின் மூலம் எப்படி பணம் பெறுவது என்பது தொடர்பான வீடியோவை பார்த்து கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.