அரசுப் பள்ளி என்றாலே திறன் குறைந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பராமரிப்பு இல்லாத சுற்றுச்சூழல் என்ற தவறான பிம்பத்தைச் சமீபகாலமாகப் பல அரசுப்பள்ளிகள் தகர்த்து எறிந்து சாதனை புரிந்து வருகின்றன. அந்த வரிசையில் முக்கியமான ஒரு பள்ளிதான் அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி.
கடந்த நவம்பர் 29ஆம் தேதி பார்க் கல்வி குழுமம் பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் கண்காட்சி ஒன்றை நடத்தியது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் அரசூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்களின் ‘ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் காகுல்ஸ்’ கண்டுபிடிப்பு இரண்டாம் பரிசு வென்று பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. மேலும், அந்த பள்ளியிலிருந்து 30 பேர் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளோடு அந்த நிகழ்வில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது. தங்கள் பள்ளியில் உள்ள STEM என்ற லேப் உதவியோடு மாணவர்கள் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு மழையின் நடுவில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வரும் பள்ளி மாணவர்களை நேரில் சென்று நாம் பேசுகையில், “இது நாங்க மூணு பேரும் சேர்ந்து தான் இந்த பிராஜெக்ட்டை கண்டுபிடிச்சோம். இந்த பிராஜெக்ட் பேரு ‘ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் ஃபார் விஷ்வலி சாலஞ்ச்’ (SMART WALKING STICK FOR VISUALLY CHALLENGE). பார்வை சவால் இருக்குறவங்க வேறொருவருடைய தயவுல தான் நடக்குற மாதிரி இருக்கும். இந்த ஸ்டிக்கோட உதவி மூலமாக அவங்களால தனியாவும் நடக்க முடியும். அந்த ஸ்டிக்கோட வேற வெர்ஷன்தான் இந்த காகுல்ஸ் (GOGGLES). இந்த இரண்டுக்கும் ஒரே செயல்பாடுதான். நடந்து செல்லும் வழியில எதாச்சும் தடங்கள் இருந்தா சத்தம் எழுப்பி அவங்கள உஷார் படுத்தும். நாங்க 10 நாள்ல இந்த பிராஜெக்ட் பண்ணி முடிச்சோம் .
இது உருவாக்குறதுக்கான செலவு கம்மிதான். வேஸ்ட்னு தூக்கிப் போட்ட பைப், சாதாரண கண்ணாடி, இந்த மாதிரி பொருள்கள் வெச்சு தான் உருவாக்கியிருக்கோம். இந்த பிராஜெக்ட் நாங்க பண்றதுக்குக் காரணம் எங்க ஸ்கூல்ல பார்வை சவால் மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருத்தர் இருக்காங்க. அவங்க க்ளாஸ் ரூம் போகணும்னா கூட மாணவர்கள் யாராவதுதான் கூப்பிட்டு போவாங்க. இந்த மாதிரி பார்வை குறைபாடுல கஷ்டப்படுறவங்களுக்கு எங்க பிராஜெக்ட் ரொம்பவே உபயோகமாக இருக்கும். இதில் உள்ள சிறு சிறு குறைகளைச் சரி பண்ண முயற்சி எடுத்து வரோம்” எனத் தங்கள் கண்டுபிடிப்பு குறித்து ஆர்வமாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கம் அளித்தனர் ஏழாம் வகுப்பு படிக்கும் ஐசக் ஜெபக்குமார், மருதீஷ் மற்றும் வீரமணி.
மாவட்ட அளவிலான நிகழ்வில் இரண்டாம் பரிசு பெற்ற குழுவினருக்குப் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“எங்க பிராஜெக்ட் பேரு ‘ரோபோட்டிக் கார் (ROBOTIC CAR)’ இத நீங்க ஃபோன்ல கனெக்ட் பண்ணி இயக்க முடியும். இத நாம இனி கொஞ்சம் மேம்படுத்துனா தீயணைப்புக்குப் பயன்படுத்தலாம். ஜீடி சாரிட்டபில் (GD CHARITABLE TRUST) அறக்கட்டளை நடத்திய ரோபோ சாக்கர் ரோபோ ரேஸ் (ROBO SOCCER ROBO RACE) போட்டியில முதல் பரிசு ஜெயிச்சோம். மூன்றாவது பரிசும் எங்க பள்ளிதான் ஜெயிச்சாங்க. இந்த பிராஜெக்ட் எல்லாமே நாங்க STEM லேப்லதான் உருவாக்குனோம். அபிநயா மேம், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் இவங்க எல்லாரும் அதிகமா சப்போர்ட் பண்றாங்க. அவங்களுக்கு ரொம்ப நன்றி” என்று தங்களுக்கு ஊக்கம் கொடுத்த பள்ளிக்கு நன்றி தெரிவித்தனர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விஷால் நாதன், அருண்,விக்னேஷ் . மேலும் அந்த கண்டுபிடிப்புகளை நமக்கு ஆர்வமாகச் செயல்படுத்தியும் காட்டினர்.
SCIENCE TECHNOLOGY ENGINEERING
MATHEMATICS என்பது இந்த STEM லேப்பின் விரிவாக்கம். அனைத்து வகுப்புகளும் வாரம் ஒரு முறை மற்றும் விடுப்பு நேரங்களிலும் தங்கள் அறிவியல் செயல்களில் ஈடுபட பள்ளி வழிவகை செய்கிறது. 20 லட்ச ரூபாய் முதலீட்டில் ஜிடி சாரிட்டி (GD CHARITY) என்ற அறக்கட்டளை இந்த லேப் திறக்க உதவிப் புரிந்துள்ளது.

“இந்த ஆண்டு ஜனவரி மாசம் 3 ஆம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் இந்த லேப்பை திறந்து வெச்சார். பசங்க அவங்க அறிவு, ஆர்வம், திறமை இதை எல்லாம் வளர்த்துக்க இந்த லேப் ரொம்ப உபயோகமா இருக்கு. பசங்க வெளிய போயி நிறைய கலந்துக்குறாங்க. அதனால வெளிய இருந்தும் நிறைய பேர் ஊக்கப்படுத்துறாங்க. அவங்க எல்லோருக்கும் ரொம்ப நன்றி. கடைசியா பசங்க ஜெயிச்சதுக்கு நிறைய பத்திரிகை மற்றும் ஊடகத்துறை பாராட்டினாங்க. அவங்களுக்கும் ரொம்ப நன்றி” என்றார் STEM லேப் ஆசிரியரான அபிநயா.

“வருடா வருடம் பொதுத் தேர்வுகள்ல எங்க மாணவர்கள் பலர் முழு மதிப்பெண் வாங்குவாங்க. படிப்பு இல்லாம பிற போட்டிகளிலும் அதிகம் கலந்துகொள்வாங்க. அரசு நடத்தும் கலைத்திருவிழால மாநில அளவில் முதலிடம் பிடிச்சோம். ஸ்போர்ட்ஸ்லயும் சிறப்பான பங்களிப்ப எங்க மாணவர்கள் தர்றாங்க. அதனால இந்தப் பகுதியில எங்க பள்ளி பிரபலம். 20 கி.மீ., வட்டாரத்துல இருக்குற மாணவர்கள் எங்க பள்ளியில்தான் படிக்குறாங்க.





இப்போ இந்த STEM லேப் எங்க பள்ளிக்குக் கூடுதல் சிறப்பா அமைஞ்சிருக்கு.” என்று தங்கள் பள்ளியின் அடுக்கடுக்கான பெருமைகளைப் பேசினார் துணை தலைமை ஆசிரியர் புவனேஷ்வரி.
மாணவர்களின் திறனை மேம்படுத்த முயற்சிப்பதுடன் அதற்கான அங்கீகாரம் வாங்கித் தர முனைவதில் தனித்து திகழ்கிறது அரசூர் அரசுப் பள்ளி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
