ஆசாத் ஆட்சி சரிவு நீதிக்கான வரலாற்று செயல் – பைடன் புகழாரம்

வாஷிங்டன் டி.சி.,

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர்.

இந்த சூழலில் தலைநகர் டமாஸ்கஸையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால், பாதுகாப்பு தேடி அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் இருந்து வெளியேறி விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆசாத் என்ன ஆனார் என்ற விவரம் சரிவர வெளியிடப்படாமல் இருந்தது. அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து தப்பியோடிய ஆசாத் மற்றும் அவருடைய குடுமபத்தினர் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கிரெம்ளின் மாளிகை வட்டாரம் தெரிவிக்கின்றது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள ஆசாத் ஆட்சியின் சரிவை அமெரிக்க ஜனாதிபதி பைடன் புகழ்ந்துள்ளார். இதனை நீதிக்கான வரலாற்று செயல் என கூறியுள்ள பைடன், அந்நாட்டு மக்கள் சிரியாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த வரலாற்று சந்தர்ப்பத்திற்கான தருணம் ஆகும் என்றார்.

தொடர்ந்து பைடன் கூறும்போது, 13 ஆண்டு கால உள்நாட்டு போருக்கு பின்னர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசாத், அவருக்கு முன்னர் அவருடைய தந்தை ஆகியோரின் கொடூர ஆட்சி முறை சூழலில், கிளர்ச்சி படையினர் வலுகட்டாயப்படுத்தி, பதவியில் இருந்து ஆசாத் வெளியேறும்படி செய்ததுடன் அவரை நாட்டில் இருந்தே தப்பியோடும்படி செய்து விட்டனர் என கூறியுள்ளார்.

நீண்ட காலத்திற்கு பின்னர், ஆசாத் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளது. லட்சக்கணக்கான அப்பாவி சிரிய மக்களை சித்ரவதை செய்து, கொடூர வகையில் கொலை செய்தது இந்த ஆட்சி என்றும் கூறியுள்ளார்.

எனினும், இதனால் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஆபத்து ஆகியவையும் ஏற்பட்டு உள்ளது என பைடன் ஒப்பு கொண்டிருக்கிறார். சிரியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் மற்றும் சிரியாவின் நலம்விரும்பிகளுடன் இணைந்து செயல்படும் என்றும் பைடன் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.