இந்திய சிறையில் உள்ள தீவிரவாதிக்கு தகவல் தர மனநலம் பாதித்தவர்களை போல சிறைக்குள் நுழைக்க பாக். முயற்சி

இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக, போதைக்கு அடிமையான மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல சிலரை சிறைக்குள் நுழைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ) முயற்சி செய்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் இதுபோன்ற 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் பலர் ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ சார்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு சாத்தியமான இடங்களில் முக்கியமான தகவலை சொல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய விசாரணையின்போது, கைது செய்யப்பட்டவர்கள் மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு நன்கு பயிற்சி வழங்கி அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஊடுருவலின் பின்னணியில் பெரிய திட்டம் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தகவல் தொடர்புக்காக செல்போன், இணையதளத்தை பயன்படுத்தினால் அவற்றை இடைமறித்து கேட்க வாய்ப்பு இருப்பதால் ரகசிய திட்டங்கள் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தால் இதுபோன்ற புதிய முறையை ஐஎஸ்ஐ கையாள முயற்சித்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.