உத்தராகண்ட் மாநிலத்தில் குளிர்கால சார்தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை மாநில அரசு தொடங்கியுள்ளது என்றும், இது உத்தராகண்ட் மாநில சுற்றுலாவில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும்’’ என முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
கேதார்நாத் கோயிலில் நேற்றுமுன்தினம் வழிபாடு நடத்திய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குளிர்கால சார்தாம் யாத்திரை குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த முறை குளிர்கால புனித பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதற்கான திட்டங்கள், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நான் ருத்ரபிரயாக்கில் தங்கியிருந்து அனைத்து மக்களையும் சந்திக்கவுள்ளேன். இங்கு மேற்கொள்ளப்படும் குளிர்கால புனிதபயணம், வரும் காலங்களில் உத்தராகண்ட் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கமாக சார்தாம் யாத்திரை 5 மாதங்கள் முதல் 6 மாதங்கள் நடைபெறும். அதன்பின்பும் மக்கள் உத்தரகாண்ட் வர பல இடங்கள் உள்ளன.
இங்கு புனிதபயணம் வரும் மக்கள் எந்தவித சிரமங்களை சந்திக்க கூடாது, ஆண்டு முழுவதும் மக்கள் உத்தராகண்ட் வந்து அதன் அழகையும், காலநிலைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியுடன் உள்ளது.
இவ்வாறு புஷ்கர் சிங் தாமி கூறினார்.