புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் கடந்த 5 வருடங்களாக 500 பேர் மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இங்குள்ள இந்துத்துவா அமைப்பினரின் தகவலின் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரட்டின் பர்தாபார் பகுதியிலுள்ள ஜானி காவல் நிலையப் பகுதியான சங்கர்நகரில் வினித் எனும் பாதிரியார் வசித்து வருகிறார். இவர், தன் குடியிருப்பினுள் ஒரு தேவாலயப் பிரார்த்தனைக்காக ஒரு பெரிய ஹாலைக் கட்டியுள்ளார். இந்த தேவாலயத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொதுமக்கள் வருவது உண்டு. இவர்கள் தங்களது நோய்களை குணப்படுத்தவும், பிரார்த்தனைகள் செய்யவும் வருவதாகக் கருதப்படுகிறது. இவர்களை கிறித்துவ மதத்துக்கு மாற்றம் செய்வதாகப் புகார்கள் கிளம்பின.
இதை விசாரிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து ரக்ஷா தளத்தின் மீரட் பொறுப்பாளரான அங்குர் சர்மா, பாரதிய கிசான் மன்ச்சின் பிராந்தியப் பொறுப்பாளரான கவுரவ் பராஷர் உள்ளிட்டோர் நேரில் சென்றுள்ளனர். அப்போது அந்த தேவாலயத்தின் மேல்தளத்தில் நிலவிய கூட்டத்தினரை மதமாற்றம் செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்காக அவர்களுக்கு ரொக்கப் பணம் கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்து ரக்ஷா தளம், கிசான் மோர்ச்சா, இந்து ஜாக்ரன் மன்ச் அப்பகுதியில் பிரச்சனை செய்துள்ளனர். இதனால், பிரச்சனையில் தலையிட்ட மீரட் காவல் துறையினர் வழக்குகளை பதிவு செய்து 15 பேரை கைது செய்துள்ளனர். இதில், பாதிரியார்களான வினித், அவரது மனைவி பாயம், தாய் கீதா, பாதிரியார் ஜானி மற்றும் சங்கீதா ஆகியோர் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவாலயத்துக்கு வந்தவர்களுக்காக விநியோகிக்கப்பட்ட பிரச்சார நோட்டீஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத 12 பேர் மீதும் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து, புகாரில் சிக்கியவர்களின் வங்கிக் கணக்குகளை மீரட் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.