இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில், மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக அரசு தரப்பில் மூத்த அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தில், `ஹிந்துஸ்தான் ஸின்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியும் வழங்கக் கூடாது.’ என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
இறுதியில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர்களும் உரையாற்றினர். அதன்படி, பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும் உரையாற்றினார்.
அவர் உரையாற்றியதைத் தொடர்ந்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், “நான் கேட்பது, அவை முன்னவர் கொண்டுவந்த தீர்மானத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் தீர்மானத்தை இதுவரை பேசிய கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்றிருக்கிறார்கள். நீங்கள் இதை வரவேற்கிறீர்களா இல்லையா என்பதை ஒரே வார்த்தையில் சொல்லிவிடுங்கள்.” என்று அவரை நோக்கிக் கூறினார்.
அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அந்தப் பகுதி மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்துக்கு நாங்கள் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். மக்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.” என்று சிரித்தவாறே கூறி அமர, அவையிலிருந்தவர்களும் உடன் சிரித்தனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…