சட்டப்பேரவையில் இந்த நிதி ஆண்டுக்கு ரூ.3,531 கோடிக்கான முதல் துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பண பலன் வழங்க ரூ.372 கோடியும், ஆவின் நிறுவனத்துக்கு மானியமாக ரூ.70 கோடி மானியமாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பேசியதாவது: 2024-25-ம் ஆண்டுக்கான இந்த துணை மதிப்பீடுகள் ரூ.3,531.05 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கின்றன. 2024-25-ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, புதிய பணிகள், புதிய துணை பணிகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட இனங்களுக்கு, சட்டப்பேரவையின் ஒப்புதலை பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் இந்த துணை மானிய கோரிக்கையின் நோக்கம்.
உற்பத்தி மதிப்பில் 0.50 சதவீதம் கூடுதல் கடன் பெறும் செயல்திறனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்துறை சீர்திருத்தத்துக்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு ரூ.1,634.86 கோடியை கூடுதல் நிதி இழப்பீட்டு மானியமாக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ.1,500 கோடி, எரிசக்தி துறை மானிய கோரிக்கையின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை, மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறு நிதி ஒதுக்கம் மூலம் செலவிடப்படும்.
அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்து ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதிய பண பலன்களை வழங்க, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு ரூ.372.06 கோடியை அரசு அனுமதித்துள்ளது. தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதிய சட்டம் திருத்தப்பட்டு, எதிர்பாரா செலவு நிதி ரூ.150 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை பெற, துணை மதிப்பீடுகளில் ரூ.350 கோடி, நிதித் துறை மானிய கோரிக்கையின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்துக்கு (ஆவின்) ரூ.70 கோடியை மானியமாக அரசு அனுமதித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த துணை மதிப்பீடுகள் மீது விவாதம் நடத்தப்பட்டு, நிதி ஒதுக்கத்துக்கு இன்று ஒப்புதல் பெறப்படும்.