மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு சட்டமன்றத்தின் புதிய கூட்டம் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக கூறி பதவியேற்றுக்கொள்ள மறுத்தனர். நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதோடு புதிய சபாநாயகருக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் பா.ஜ.க சார்பாக சபாநாயகர் பதவிக்கு ராகுல் நர்வேகர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் சபாநாயகருக்கான வேட்பாளரை நிறுத்த மறுத்துவிட்டன. இதனால் இன்று காலையில் 15வது சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்டமாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுகிறார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் அவையின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஏற்கெனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக சபாநாயகராக இருக்கும் ராகுல் நர்வேகர் மும்பை கொலாபா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். ராகுல் நர்வேகர் சபாநாயகராக இருந்தபோதுதான் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணியை உண்மையான சிவசேனா, மற்றும் தேசியவாத காங்கிரஸ் என்று அறிவித்தார். இதற்கிடையே அமைச்சரவை பதவியேற்பதில் மேலும் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்னும் துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரை சந்தித்து பேசவில்லை. அதோடு உள்துறை இலாகா தொடர்பாகவும் இன்னும் ஒருமித்தக் கருத்து எட்டப்படவில்லை. எனவே 11 அல்லது 12ம் தேதி நடக்க இருக்கும் அமைச்சரவை பதவியேற்பு மேலும் சில தினங்கள் தள்ளிப்போகும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் இப்போது நாக்பூர் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்.