சிரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு அதிபர் ஆசாத் தப்பியது குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், “யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்” என்று கிளர்ச்சி குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்), சிரியா தேசிய படை, அமெரிக்க ராணுவத்தின் ஆதரவு பெற்ற பிரீ சிரியா படை உள்ளிட்ட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக போரிட்டு வந்தன. சிரியா அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு அளித்து வந்தன. இந்த சூழலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் கடந்த 8-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றின. அதிபர் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியது: கடந்த நவம்பர் இறுதியில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மிகப் பெரிய போரை எச்டிஎஸ் கிளர்ச்சிக் குழு தொடங்கியது. ஆசாத் படையில் இருந்த பல்வேறு ராணுவ தளபதிகள் கிளர்ச்சிக் குழுவுடன் ரகசியமாக கைகோத்தனர். இதன் காரணமாக அலெப்போ உள்ளிட்ட நகரங்களில் கிளர்ச்சிக் குழு வீரர்களுடன் ராணுவ வீரர்கள் போரில் ஈடுபடவில்லை. தீவிர போரை தொடங்கிய 13 நாட்களில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிக் குழுக்கள் சுற்றிவளைத்தன. அங்கும் அதிபர் ஆசாத் படை வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.
இதனிடையே துருக்கி, ரஷ்யா, ஈரான் நாடுகளின் மூத்த அதிகாரிகள், கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 7-ம் தேதி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். கிளர்ச்சிக் குழுக்கள் சார்பில் துருக்கி அதிகாரிகளும் அதிபர் ஆசாத் சார்பில் ரஷ்யா, ஈரான் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆசாத் பத்திரமாக வெளியேற கிளர்ச்சிக் குழுக்கள் ஒப்புக் கொண்டன. இதேபோல சிரியாவின் லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளம், சிரியாவின் கிமெய்மிம் பகுதியில் உள்ள ரஷ்ய விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கிளர்ச்சிக் குழுக்கள் உறுதி அளித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி நள்ளிரவில் சிரியா அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் உள்ள தனது மாளிகையில் இருந்து லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு ரகசியமாக சென்றார். அங்கிருந்து கடந்த 8-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சென்றடைந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே அதிபர் ஆசாத்தின் மனைவி அஸ்மா மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் ரஷ்யாவில் தஞ்சமடைந்து விட்டனர். தற்போது அதிபர் ஆசாத்தும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆஸ்திரியாவில் உள்ள ரஷ்ய தூதர் உலினோவ் கூறும்போது, “சிரியா அதிபர் ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அடைக்கலம் அளித்துள்ளது. எங்களது நண்பர்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்” என்று தெரிவித்தார். ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா கூறும்போது, “விமான விபத்தில் அதிபர் ஆசாத் உயிரிழந்துவிட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் பொய்களை பரப்பின. இதற்காக மேற்கத்திய ஊடகங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்” என்று தெரிவித்தார்.
கிளர்ச்சி குழு தலைவர் அறிவிப்பு: சிரியாவை கைப்பற்றிய ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அபு முகமது அல் ஜூலானி, டமாஸ்கஸில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த உமையத் மசூதியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அவர் கூறும்போது, “ஈரானின் உத்தரவுக்கு சிரியா இனிமேல் அடிபணியாது. நாங்கள் சுதந்திரமாக செயல்படுவோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிரியா சொந்தமானது. யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்” என்று தெரிவித்தார்.
அதிபர் ஆசாத் மாளிகை சூறை: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அப்போது ஹசீனாவின் உடைமைகள் சூறையாடப்பட்டன. இதேபோல சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் ஆசாத்தின் மாளிகைக்குள் கிளர்ச்சிக் குழு வீரர்கள், போராட்டக்காரர்கள் கடந்த 8-ம் தேதி நுழைந்தனர். அந்த மாளிகையில் 40 சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை கிளர்ச்சிக் குழுவினர் ஓட்டிச் சென்றனர். அதிபர் மாளிகையில் இருந்த ஷோபா, சேர்கள், கட்டில்கள், ஆடம்பர பொருட்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: சிரியாவில், பிரீ சிரியா படையின் கட்டுப்பாட்டில் உள்ள அல்-தன்ஃப் நகரில் அமெரிக்க ராணுவ தளம் செயல்படுகிறது. அங்கிருந்து புறப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான 75 இடங்களில் தாக்குதல் நடத்தின. இதுகுறித்து அமெரிக்க ராணுவ கமாண்டர் மைக்கேல் கூறும்போது, “சிரியாவின் தற்போதைய சூழலை பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயற்சி செய்யக்கூடும். இதை தடுக்க சிரியாவின் 75 இடங்களில் அதிதீவிர தாக்குதல்களை நடத்தினோம்” என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தின. ஆசாத் படையின் ரசாயன ஆயுத கிடங்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலும் சிரியாவும் 83 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். சிரியா எல்லைப் பகுதியில் சில கி.மீ. தொலைவுக்கு இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.