இயக்குநர் பாலாவுக்கு சென்னையில் பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘சேது’ வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. திரையுலகில் வெள்ளிவிழா காணும் அவரை திரையுலகமே திரண்டு விழா நடத்த திட்டமிட்டு வருகிறது. அத்துடன் அவர் அருண் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் ‘வணங்கான்’ படத்தின் இசைவெளியீடும் அந்த விழாவில் நடக்கிறது. ‘மாநாடு’, ‘வணங்கான்’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பாலு மகேந்திராவின் சீடரான பாலாவின் இயக்கத்தில் கடந்த 1999 ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி வெளியான படம் ‘சேது’. இந்த படத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார், ஶ்ரீமன் என பலரும் நடித்திருந்தார்கள். விக்ரமின் திரைப்பயணத்தில் அவருக்கு சினிமா மீதான பிடிப்பையும், வெற்றியையும் விதைத்த படமிது. ‘சேது’விற்காக சிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றார் பாலா. தவிர, சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு விருது உள்பட பல விருதுகளையும் ‘சேது’ குவித்தது.
நாளை இப்படத்தின் 25வது ஆண்டாகும். பாலா இப்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின், ராதாரவி, ரவிமரியா, அருள்தாஸ் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
‘வணங்கான்’ படம் பொங்கல் விருந்தாக அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி அன்று வெளியாகிறது. அதன் இசை வெளியீட்டு விழா வருகிற 18ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவை மிகவும் எளிமையாக கொண்டாட நினைத்தனர். ஆனால், இந்த மாதம் ‘சேது’வின் 25வது ஆண்டும் வந்திருப்பதால், அதாவது பாலா, திரையுலகில் அடியெடுத்து வைத்து 25வது ஆண்டை கொண்டாடுவதால், அதனையும் கொண்டாட நினைத்தார் சுரேஷ் காமாட்சி.
இது குறித்து பாலாவின் நட்பு வட்டத்தில் உள்ள சில இயக்குநர்களிடம் அதனை தெரிவித்திருக்கிறார். இயக்குநர்கள் அத்தனை பேரும் இதனை வரவேற்றுள்ளனர். பாலாவிற்கான பாராட்டு விழா; ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா இரண்டும் இணைந்த விழாவாக வருகிற 18-ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சுரேஷ் காமாட்சியின் தலைமையில் இதற்கென இயக்குநர்கள் டீம் ஒன்றும் விழா ஏற்பாடுகளை கவனிக்க உள்ளது.
இதுகுறித்து சுரேஷ் காமாட்சியிடம் பேசினோம். ”திரையுலகில் இயக்குநராக தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் பாலா அண்ணன். எல்லோரும் ஒரு பாணியில் கடந்து பாதை அமைத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கென ஒரு பாணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர். ‘சேது’வில் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், உடலால்… உடல் புலன்களால் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் அன்பைத் தேடி அலைபவர்கள் என அதுவரை பேசப்படாத, பாலா உருவாக்கிய செல்லுலாய்டு மனிதர்கள் காலம் காலமாய் தமிழ்த் திரையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களின் கடின வாழ்வைத் தன் அகத்தின் மூலம் பார்த்து பதிவு செய்த பாலாவின் திரை மொழி மிக அசாத்தியமானது.
‘சேது’ வெளியான டிசம்பர் 10ம் தேதி என்பதால், பாலாவிற்கான விழாவையும் நாளை (டிசம்பர் 10) நடத்த திட்டமிட்டோம். ஆனால், குறுகிய காலம் என்பதாலும், இதே மாதத்தில் ‘வணங்கான்’ இசை வெளியீடும் இருந்ததால், விழாவை 18ம் தேதி அன்று நடத்த திட்டமிட்டுள்ளோம். ‘உங்களுக்கு ஒரு விழா’ நடத்தப் போகிறோம் என்று பாலா அண்ணனிடம் சொன்னதும், ‘அதெல்லாம் வேணாம்’ என விடுவிடுவென சொல்லி விட்டார். அவர் அவரது கலைப்பயணத்தை கௌரவிப்பது திரைத்துறையினரின் கடமை என கருதுவதால், விழா எடுக்க தீர்மானித்தோம். விழா குழுவில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, மிஷ்கின், சமுத்திரகனி, ராம், ஏ.எல்.விஜய் மற்றும் அருண்விஜய் ஆகியோர்
இணைந்துள்ளனர். பாலாவின் படத்தில் நடித்திருப்பவர்கள் உள்பட அனைவரையும் விழாவிற்கு அழைக்கின்றோம். விழாவிற்கான பணிகள் இப்போது தான் தொடங்கியிருக்கிறோம். யார் யார் வருகிறார்கள் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். தமிழ்த் திரையுலகின் அனைத்து நண்பர்களையும் ஒரே குடும்பமாய் நின்று வாழ்த்த வருகை தருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.” என்கிறார் சுரேஷ் காமாட்சி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…