SR புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’.
இந்த படத்தில் ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் சடுகுடு’ பாடல் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ‘அலைபாயுதே’ இயக்குநர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆடியோ நிறுவனமான சரிகம ஆகியவை முறையான அனுமதி வழங்கி உள்ளனர். இந்தக் காதல் ‘காதல் சடுகுடு’ பாடலிற்கு டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடனம் அமைத்திருக்கிறார்.
இந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய டான்ஸ் மாஸ்டர் சதீஷ், “மிக மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் கோரியோகிராபராக என் வேலை கேமராவுக்குப் பின்னால் முடிந்து விடும். பல வருடங்களுக்குப் பிறகு, கோரியோகிராஃபராக மேடை ஏறியுள்ளேன். ‘மெட்ராஸ்காரன்’ படக்குழுவிற்கு நன்றி. ‘காதல் சடுகுடு’ பாடல் இனிமையான அனுபவம்.
இந்தப் பாடலுக்கு கல்லூரி காலத்தில் நடனமாடியுள்ளேன், இந்தப் பாடலை ரீமேக் செய்ய வேண்டும் எனச் சொன்னபோது, மகிழ்ச்சியாக இருந்தது. ஷேன் நிகம் ரசிகன் நான், மனிதர் எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறார் என வியந்திருக்கிறேன்.
அவர் இந்தப்பாடலில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நிஹாரிகாவும் மிக அருமையாக ஒத்துழைத்தார். இந்தப் படத்தை மிகவும் நம்புகிறார். இந்தப்படம் பெரிய வெற்றி பெறும்” என்று பேசியிருக்கிறார்.