உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். டிசம்பர் 12-ல் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் என்பதால், ஆச்சரியமூட்டும் அப்டேட்கள் காத்திருக்கின்றன என்கிறது கோடம்பாக்கம்.
* ரஜினியின் பிறந்த நாளன்று மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘தளபதி’ ரீரிலீஸ் ஆகிறது. கடந்த 1991 -ம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ‘தளபதி’ வெளியானது. தாய் – மகன் சென்டிமென்ட், நட்பின் இலக்கணம் என மிக நேர்த்தியாகவும் கவித்துவமாகவும் சித்திரித்த படம் ‘தளபதி’. இளையராஜாவின், இசை மற்றும் பாடல்களால் கொண்டாடப்பட்ட படமிது. இப்போது ரீரிலீஸ் ஆவதால் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்களும் இதனை வரவேற்க ரெடியாகிவிட்டனர்.
* ‘தளபதி’ கொண்டாட்டத்தை தொடர்ந்து ‘கூலி’ பட அப்டேட்களும் காத்திருக்கின்றன. ‘கூலி’யின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தோடு, முழுப்படமும் நிறைவடைகிறது என்பதால், அதன் படப்பிடிப்புகள் பரபரக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கூலி’. இந்த படத்தில் தேவாவாக நடித்து வருகிறார் ரஜினி. ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஷோபின் ஷாகிர், ரெபா மோனிகா ஜான் என பலரும் நடித்து வருகின்றனர். சென்னை, ஹைதராபாத்தை தொடர்ந்து இப்போது ராஜஸ்தானிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மல்டி ஸ்டார்கள் இணைந்து கலக்கும் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் ஸ்டாரும் இணைகிறார். ஜெய்பூர் ஷெட்யூலில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்க உள்ளனர். பாலிவுட் ஸ்டாரான அமீர்கான், இந்த ஷெட்யூலில் ரஜினியுடன் இணைகிறார் என்கிறார்கள். முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள ‘கூலி’யில் அழுத்தமான ஒரு மெசேஜ் இருக்கிறது என்கின்றனர். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘கூலி’யின் கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகவிருக்கிறது என்கிறார்கள். ‘வேட்டையன்’ படத்தில் அமிதாப்பும், ரஜினியும் இணைந்த போஸ்டர் வெளியானது போல், இதில் அமீர்கானுடன் இணைந்திருக்கும் போஸ்டரும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இதற்கிடையே பிறந்த நாள் அன்று, ‘ஜெயிலர் 2’ படத்தின் புரொமோ வீடியோ ஒன்றும் வெளிவரும் என்ற பேச்சு இருக்கிறது. நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அதிரடி வசூலை அள்ளிய படம் ‘ஜெயிலர்’. மல்டி ஸ்டார் படமாக உருவான ‘ஜெயிலர்’ படத்தின் அதிரி புதிரி வெற்றியால், அதன் இரண்டாம் பாகம் எப்போது வருமென எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ‘கூலி’யை தொடர்ந்து ரஜினி நெல்சன் இயக்கத்திலும் மணிரத்னத்தின் இயக்கத்திலும் நடிப்பாரென சொல்கின்றனர். சென்னை கோவளத்தில் ‘ஜெயிலர் 2’க்கான டெஸ்ட் ஷூட் நடந்திருக்கிறது என்றும், புது தோற்றத்தில் ரஜினியின் போட்டோஷூட்டும் எடுத்திருக்கின்றனர் என்ற தகவலும் பரவி வருகிறது. இது குறித்து விசாரிக்கையில் நெல்சன், ‘ஜெயிலர் 2’வை இயக்கப் போவது உண்மைதான். ஆனால், புரொமோ ஷூட் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்றும், இப்போது தீவிரமான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறார் நெல்சன் என்கின்றனர். ‘கூலி’யை முடித்துவிட்டு அடுத்த நெல்சன் படத்திற்கு வருவார் என்கின்றனர். அதன்பின்னரே மணிரத்னம் படத்திற்கு ரஜினி செல்கிறாராம்.
‘கூலி’யின் ஜெய்பூர் ஷெட்யூல் தொடர்ந்து இரண்டு வாரங்கள் ஜெய்பூர், ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெறும், அதன்பின் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…