“அண்ணாமலை வந்தால்தான் ஆளும் அரசுக்கு மக்கள் மீது பாசம் வருமோ?” – எஸ்.ஆர்.சேகர்

கோவை: அண்ணாமலை வந்தால் தான் ஆளும் அரசுக்கு மக்கள் மீது பாசம் வருமோ என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (டிச.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேசியது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. நாளுக்கு நாள் மோசமாகி வரும் சட்டம் ஒழுங்கு, அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்து கவலை கொள்ளாமல் இருந்த முதல்வரும், உட்க்கட்சியிலேயே பல எதிர்க்கட்சிகளை சமாளிப்பதையே முழு நேரப் பணியாக மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும், மக்களுக்காக களத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகைக்குப் பிறகு, வேறு வழியில்லாமல் உண்மையிலேயே மக்கள் பிரச்சினையைப் பற்றி பேச துவங்கியிருப்பது மகிழ்ச்சி.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்திற்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தோம். அவர்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றி விட்டார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற ரீதியில் ஒரு கருத்தை முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து கூறிய போது, அமைச்சர் பொன்முடி அண்ணாமலை பேச வேண்டிய இடத்தில் பேசி கொஞ்சம் நிதி வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சிரித்தவாறே கூறினார்.

மொத்தத்தில் திமுகவிற்கு வாக்களித்து அதன் உறுப்பினர்களை சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்புவதில் எந்த பலனும் இல்லை என்பதை மக்கள் மன்றத்திலும் சட்டப்பேரவையிலும் முதல்வரும், அமைச்சரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பேச வேண்டிய இடங்களில் பேசி, தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொண்டு வரப்போவது அண்ணாமலை தான். ஒரு திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு, பின்பு அதே திட்டத்தை எதிர்ப்பது திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல என்ற வரலாற்று உண்மையையும் நாம் மறந்துவிட வேண்டாம். திமுக, அதிமுக-வின் பங்காளி சண்டை நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.