பிரிஸ்பேன்,
இந்தியா – ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியின் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றிய சிராஜ் அதனை ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். மேலும் அவரை நோக்கி “வெளியே செல்லுங்கள்” என்ற வகையில் சைகை செய்தார். இதனால் அவர்களுக்குள் சிறிது மோதல் ஏற்பட்டது.
அதன் பின் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் “நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்” என்றுதான் சிராஜிடம் தாம் சொன்னதாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் அதை சிராஜ் வேறு விதமாக புரிந்து கொண்டு அப்படி செய்தது ஏமாற்றத்தைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த சூழ்நிலையில் விக்கெட்டை எடுத்தபோது வெறித்தனமாக கொண்டாடிய தம்மிடம் ஹெட் சில மோசமான வார்த்தைகளை சொன்னதாக முகமது சிராஜ் தெரிவித்தார். இறுதியில் போட்டியின் முடிவில் இருவரும் கை கொடுத்து புன்னகையான முகத்துடன் சென்று மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில், களத்தில் சிராஜ் அவ்வாறு செய்தது தவறு என பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், போட்டியின் பரபரப்பில் சிராஜ் அவ்வாறு நடந்து கொண்டதில் எந்த தவறுமில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆர்சிபி ஐபிஎல் அணியில் சிராஜுடன் என்னுடைய நேரத்தில் மகிழ்ச்சியாக இருந்தேன். அவர் தங்களுடைய அணி பந்து வீச்சு அட்டாக்கின் லீடராக இருந்தார்.
அவர் விராட் கோலியை போல மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விளையாட்டின் ஓட்டத்துடன் இருந்து ரசிகர்களுடன் கலந்து எல்லா வகையான விஷயங்களையும் செய்யக்கூடிய மற்றொருவர். கடந்த சில வருடங்களாக ஐ.பி.எல் தொடரில் அவர் சில சீரியஸான பவுலிங் ஸ்பெல்லை வீசினார். அந்த வகையில் அவர் மிகவும் நல்ல கேரக்டர். இவ்வாறு சில நேரங்களில் நடப்பதை பார்ப்பது நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.