சென்னை: ‘அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை’ என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் விவாதம் நடைபெற்றது.
ஜி.கே.மணி (பாமக): அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. இந்திய சூரியஒளி மின்உற்பத்திக் கழகத்திடம் இருந்து சூரியஒளி மின்சாரத்தை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதில் முறை கேடு நடந்துள்ளதாக தமிழகத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அது உண்மையா, இல்லையா என்பதை அரசு விளக்க வேண்டும்.
பேரவை தலைவர் மு.அப்பாவு: இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் தெளிவான பதிலை கொடுத்துள்ளார்.
ஜி.கே.மணி: செய்தி வந்துவிட்டது. அது உண்மையா என்று தெரிய வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஜி.கே.மணி இந்த அவையில் மட்டும் அல்ல, அவரது கட்சியை சேர்ந்த தலைவர்கள் வெளியிலும் இதுபற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதானியோடு முதல்வருக்கு தொடர்பு உள்ளது. அதானியை முதல்வர் சந்தித்தார் என்று பேசி வருகின்றனர். ஆனால், அவர்கள் வெளியே பேசிக் கொண்டிருக்கும் அனைத்தையும், இந்த அவையில் ஜி.கே.மணி பதிவு செய்யவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒரு வேளை உண்மை தெரிந்துவிட்ட காரணத்தால், விட்டு விட்டார்களா என்று தெரியவில்லை.
தமிழகத்தில் அதானி குழுமத்தின் தொழில் முதலீடுகள் குறித்து பொது வெளியில் வரும் தவறான புகார்களுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவான விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அதன் பின்னரும், இதுபற்றி செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதானி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும். அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி இண்டியா கூட்டணிக் கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன. திமுக மீது குறை சொல்லும் பாஜக, பாமக, நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை ஆதரிக்கவும், விளக்கி பேசவும் தயாராக இருக்கிறதா?
ஜி.கே.மணி: நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டப்பேரவையாக இருந்தாலும், தமிழகத்தின் பிரச்சினை என்ற காரணத்தால் தான் அரசு விளக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின்: பலமுறை சொல்லியிருக்கிறோம். இப்போதும் சொல்கிறேன். அதற்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனை ஆதரித்து பேசுவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
ஜி.கே.மணி: முதல்வரை சந்தித்தது தொடர்பான அந்த விவகாரத்துக்கும், அவ்வளவு ஆழமாகவும் நான் போக விரும்பவில்லை. நான் சொல்ல விரும்பவில்லை. நான் சொல்லவும் இல்லை.
மு.க.ஸ்டாலின்: நீங்கள் ஆழமாக போகவில்லை என்று சொல்லலாம். ஆனால், உங்கள் தலைவர்கள் ஆழமாக சென்று அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக தான் விளக்கத்தை, இந்த அவையில் எடுத்து சொல்லியிருக்கிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கான விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும் என்பதை பாமக ஆதரிக்க வேண்டும். அதற்கு பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.
ஜி.கே.மணி: நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவுக்கு ஆதரவு இருக்கும்.
மு.அப்பாவு: நன்றி. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதானி, முதல்வரை சந்தித்ததாக மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு வைப்பதில் அர்த்தம் இல்லை. முதல்வர் தெளிவாக கூறிவிட்டார். தமிழ்நாடு அரசுக்கும், அதானிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறோம் என்றார்.